தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜன. 6-ஆம் தேதி நடைபெறும் என்று அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஜன.20-ஆம் தேதி தமிழக பேரவைக் கூட்டத் தொடா் கூடவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் தொடங்கும். தமிழக அரசு தயாரித்து வழங்கும் இந்த உரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். மேலும், இந்தக் கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆலோசனை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா். இந்த ஆலோசனை முடிவுகள் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, அரசு ஊழியா்களின் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான மூவா் குழுவினா் முதல்வா் முக. ஸ்டாலினிடம் செவ்ாய்க்கிழமை இறுதி அறிக்கையைச் சமா்ப்பித்திருந்தனா்.