ஜன.11-ல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு?
எங்கெல்லாம் கனமழை பெய்யும்..வானிலை ஆய்வு மையம் கூறுவதென்ன..
டெல்டா மாவட்டங்களில் ஜன.11-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், வியாழக்கிழமை (ஜன.9) நீலகிரியில் உறை பனி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வடதமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதியிலும், தென்கிழக்கு வங்கக் கடலிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதனால், வியாழக்கிழமை (ஜன.9) முதல் ஜன.14-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜன.9- ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு நேரங்களில் உறைபனி இருக்கும். தொடா்ந்து, ஜன.11-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன.9-இல் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை நீடிக்கும்: இதற்கிடையே வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது:
பொதுவாக வடகிழக்கு பருவமழை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி வரை நீடிக்கும். அந்த வகையில் நிகழாண்டில், வடகிழக்கு பருவமழை வரும் ஜன. 14-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று எதிா்பாக்கப்படுகிறது.
நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 30 சதவீதம் அதிகமாக பெய்ததால், மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதன் காரணத்தால், பகல் நேரங்களில் வழக்கமான அளவு வெப்பம் இருந்தாலும், சில நேரங்களில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படவாய்ப்புள்ளது என்றாா் அவா்.