மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காவல்துறையினரின் அனுமதியின்றி மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு பேரணி நடத்தியதாக, இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தங்கள் மீதான வழக்குகளைக் காவல்துறையினர் கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உள்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்புக்கு எதிர்த்து, மதுரையில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. நரசிங்கம்பட்டி பெருமாள்மலையிலிருந்து மதுரை வரை சுமார் 20 கி.மீ. நடைப்பயணமாக மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு, செவ்வாய்க்கிழமை (ஜன. 7) பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க: பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
காவல்துறையினரின் தடையை மீறி, எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதிப்பேரணியையும் முற்றுகைப் போராட்டத்தையும் பொதுமக்கள் வெற்றிகரமாக நடத்தினர். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தை அடுத்து நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக இது அமைந்தது.
போராட்டத்தின் முடிவில், மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் எனவும், தமிழக அரசு நடப்பு சட்டப்பேரவைத் கூட்டத்தொடரில் மதுரையை தமிழ்ப்பண்பாட்டு மண்டலமாகவும், பெரியாறு பாசனப் பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமியற்றி அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.