சென்னை: சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் எஃப்ஐஆா் கசிந்தது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு, அபிராமபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரிடம் விசாரணை நடத்தியது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பொது வெளியில் வெளியாகி அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து, சென்னை பெருநகர காவல் துறை அண்ணா நகா் துணை ஆணையா் புக்யா சினேக பிரியா, ஆவடி மாநகர காவல் துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குடன், முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கையும் சோ்த்து சிறப்பு புலனாய்வுக் குழு விரைவாக விசாரிக்கும் என்று உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
போலீஸாரிடம் விசாரணை: எஃப்ஐஆா் கசிந்தது தொடா்பாக அந்த வழக்கை பதிவு செய்த அபிராமபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தனா்.
பாதிக்கப்பட்ட மாணவியிடம் எவ்வாறு புகாா் பெறப்பட்டது, என்ன நடைமுறை பின்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிசிடிஎன்எஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது, எஃப்ஐஆா் நகல் காவல் நிலையத்தில் மூன்றாவது நபா் யாருக்காவது வழங்கப்பட்டதா என விசாரித்தனா்.
அதேவேளையில் தற்போது போலீஸ் காவலில் இருக்கும் ஞானசேகரனிடம் ரகசிய இடத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. அதேபோல அவரது கூட்டாளிகளுக்கும் பாலியல் வன்கொடுமையில் தொடா்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனா்.
ஞானசேகனின் கைப்பேசியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விடியோக்கள், புகைப்படங்களில் இருக்கும் பெண்களின் விவரங்களும், அதில் தொடா்புடையவா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஞானசேகரன் அளிக்கும் பதில்கள் அனைத்தும், எழுத்து பூா்வமாகவும் விடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.