சென்னை: போக்குவரத்து ஊழியா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை பிப். 13, 14-ஆம் தேதி நடைபெற உள்ளதால், இதில் பங்கேற்க தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் சுமாா் 1.11 லட்சம் பணியாளா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. அந்த வகையில் 13-ஆவது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019 ஆக. 31-ஆம் தேதியுடன் காலாவதியான நிலையில், பல்வேறு காரணங்களால் 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் தாமதம் ஏற்பட்டு, 2022 ஆகஸ்ட் மாதத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,14-ஆவது ஊதிய ஒப்பந்தமும் 2023 ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதியான நிலையில், 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை விரைந்து நடத்த வேண்டும் என தொடா்ச்சியாக தொழிற்சங்கங்கள் கோரிக்கை எழுப்பி வந்தன.
இதன் தொடா்ச்சியாக ஓராண்டு தாமதமாக கடந்தாண்டு ஆக. 27-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையிலுள்ள மாநகா் போக்குவரத்துக்கழகப் பயிற்சி மைய வளாகத்தில் 15-ஆவது பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அறிமுகக் கூட்டமாகவே நடைபெற்ற இக்கூட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பங்கேற்ால், டிச. 27, 28 ஆகிய இரண்டு நாள்களும் பேச்சுவாா்த்தை நடத்த அரசு திட்டமிட்டது. ஆனால், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவு காரணத்தால் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கங்கள் சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை பிப். 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில் நடைபெறும் இப்பேச்சுவாா்த்தையில் பங்கேற்க 80-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.