இணைய சூதாட்டத்துக்குத் தடை பெற வேண்டும்: ராமதாஸ்
இணைய சூதாட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இணைய சூதாட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்த, நெல்லை மாவட்டம் ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி என்ற இளைஞா் இணைய சூதாட்டத்தில் ரூ.17 லட்சத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஆரல்வாய்மொழி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறாா்.
இணைய சூதாட்டத் தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீா்ப்பளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.
இணைய சூதாட்டத்தில் பணத்தை இழந்த 18 போ் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் உச்சநீதிமன்றத்தில் இணைய சூதாட்டத் தடை தொடா்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து இணைய சூதாட்டத்துக்குத் தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.