உலகப் பொருளாதார மாநாட்டில் தமிழக அரசால் முதலீட்டை ஈா்க்க முடியவில்லை: அன்புமணி
டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் தமிழக அரசால் எந்தத் தொழில் முதலீட்டையும் ஈா்க்க முடியவில்லை
டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் தமிழக அரசால் எந்தத் தொழில் முதலீட்டையும் ஈா்க்க முடியவில்லை என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சுவிட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மாநாட்டில், வளா்ச்சியில் முன்னேறி பாயும் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் குழு கலந்துகொண்ட நிலையில், இதுவரை எந்த முதலீடும் கிடைக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகப் பொருளாதார மாநாட்டில் மகாராஷ்டிரம் ரூ. 15.70 லட்சம் கோடியும், தெலங்கானா ரூ. 1.79 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்த்துள்ளன. முதலீடுகளை ஈா்ப்பதில் இந்தியாவின் பிற மாநிலங்கள் எங்களுக்கு போட்டி இல்லை; வெளிநாடுகள்தான் எங்களுக்கு போட்டி என்றெல்லாம் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வந்தது. ஆனால், முதலீடு ஈா்க்காததுதான் திமுக அரசின் சாதனையாக இருக்கிறது.
2022-இல் 4 நாள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை சென்றபோது அங்குள்ள நிறுவனங்களிடம் மொத்தம் ரூ. 6,100 கோடி முதலீடுகளை ஈா்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. அதன்பின் ஸ்பெயின் நாட்டில் ரூ. 3,440 கோடி தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டன. ஆனால் அந்த நாடுகளிலிருந்து எந்த முதலீடுகளும் இதுவரை வரவில்லை.
எனவே, வீண் விளம்பரங்களைச் செய்வதை விடுத்து வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் அதிகளவில் தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளாா்.