சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக : அன்புமணி
மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசியது குறித்து..
தமிழகத்தில் சமூக நீதியை திமுக புதைத்துவிட்டதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி இன்று (மார்ச் 1) குற்றம் சாட்டினார்.
மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று (மார்ச் 1) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
Advertisement
Advertisement
''பிரதமர் நரேந்திர மோடி மூன்று சாதனைகளை செய்துள்ளார். இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். இதற்கு முன்பு 93 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இக்கணக்கெடுப்பு நடந்தது.
தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்துள்ளார். 25 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். இது இரண்டாவது சாதனை.
நாட்டிலுள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு அளிக்க ரோகிணி அமைப்பை உருவாக்கி செயல்படுத்தியுள்ளார். இதனால், நாட்டில் வேற்றுமைகள் களையப்பட்டுள்ளன. இது மூன்றாவது சாதனை.
2,633 சமூகங்களில் 1,977 சமூகங்கள் வெறும் 2.5% இடஒதுக்கீட்டை மட்டுமே பெறுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்குச் சேர வேண்டியதைக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. ஆனால், சமூக நீதி குறித்துப் பேசும் திமுக அதனை புதைத்துவிட்டது.
சமூகநீதியின் பிறப்பிடமான தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், சுதந்திர இந்தியாவில் முதல்முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது பாஜக ஆளும் பிகாரில்தான்.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தோம். கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொய் கூறுகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தமிழக மக்களின் குடும்பங்களின் நிலையை அறிந்துகொள்வதில் விருப்பம் இல்லையா?
தமிழ்நாட்டில் மட்டும்தான் 69% இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதனை பாதுகாத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் இல்லையென்றால் உச்சநீதிமன்றம் இதனை ரத்து செய்திருக்கும்.
நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர் பிரதமர் மோடி. அதற்கு உதாரணமாக குஜராத்தின் செளராஷ்டிரா என்ற வறண்ட பூமியை, நீர் மேலாண்மை மூலம் வளம் மிக்க பூமியாக பிரதமர் மோடி மாற்றியுள்ளதைக் கூறலாம்.
ஆனால், தமிழ்நாட்டில் 60 ஆண்டுகாலமாக இருக்கும் காவிரி - குண்டாறு திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் திமுக இத்திட்டத்தைத் தடுத்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளது.
மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான சூழலை உருவாக்க வேண்டு. இத்தகைய மக்கள் விரோத ஆட்சியை விரட்டி, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டு. அதற்காக எங்கள் கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள்'' என அன்புமணி பேசினார்.
DMK has buried social justice Anbumani in Madurai Conference
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.