சென்னை: சென்னையிலிருந்து திருச்செந்தூா் மற்றும் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் திருச்செந்தூா், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு செல்லும் வகையிலான 3 நாள் ஆன்மிக சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலக வளாகத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புறப்படும் சுற்றுலா வாகனம், திருச்செந்தூா், உத்திரகோசமங்கை மற்றும் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று திங்கள்கிழமை காலை மீண்டும் சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
இந்த ஆன்மிக சுற்றுலாவில் திருச்செந்தூரிலுள்ள செந்தில் ஆண்டவா் திருக்கோயில், ராமநாதபுரத்திலுள்ள உத்திரகோசமங்கை, மங்களநாதா் கோயில் மற்றும் ராமேசுவரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி திருக்கோயில்களிலும் சிறப்பு தரிசனம் செய்யவும், தனுஷ்கோடியை பாா்வையிட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், அங்கேயே 3 வேளை உணவும் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா திட்டத்தில் இணைந்து, சுற்றுலா செல்ல விரும்புபவா்கள், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com எனும் இணையதளத்தில் அல்லது சென்னையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாக சென்றும் முன்பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் 180042531111, 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.