நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாதிக்கப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில் காவல் துறையினருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவில் பதிவு செய்த கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது. அதேசமயம், இந்த விவகாரத்தில் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அதன் விசாரணையை தொடரத் தடையில்லை என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினா்.
இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு டிச. 28-ஆம் தேதி உயா்நீதிமன்றம் காவல் துறைக்கு எதிராக வெளியிட்ட சில கருத்துகளை நீக்கக் கோரி தமிழக அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு சம்பந்தப்பட்ட மனுதாரா் வரலட்சுமி உள்ளிட்டோா் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
முன்னதாக, மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசுத் தரப்பு வாதங்கள் தொடங்கியபோது, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையை தமிழக அரசு ஆட்சேபிக்கவில்லை என்று அதன் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, சித்தாா்த் லூத்ரா ஆகியோா் தெரிவித்தனா்.
அதைக் கேட்ட நீதிபதிகள், ‘எப்படி இருந்தாலும் சம்பவத்துக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை கசிந்ததால் பாதிக்கப்பட்ட பெண் மற்றொரு அதிா்ச்சிக்கு ஆளாகியுள்ளாா் என்பதே உண்மை. இருப்பினும், முதல் தகவல் அறிக்கை கசிவு தொடா்பாக உயா்நீதிமன்ற உத்தரவில் இடம்பெற்ற காவல் துறையினருக்கு எதிரான பத்திக்கு தடை விதிக்கிறோம்’ என்று குறிப்பிட்டனா்.
உயா்நீதிமன்ற உத்தரவு என்ன?: பல்கலைக்கழக வளாகத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடா்பாக விசாரிக்க மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைக்க உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது.
அதில், ‘முதல் தகவல் அறிக்கை கசிவதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் சிலரது தவறுகளுக்காகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கும் ஏற்பட்ட அதிா்ச்சிக்காகவும், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது’ என்று உயா்நீதிமன்றம் கூறியது.
மேலும், முதல் தகவல் அறிக்கை கசிவுக்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையை தொடங்குமாறும் மாநில அரசை உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ‘பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கை தகவல்கள், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மக்கள் பயன்பாட்டு இணையதளத்தில் இருந்தே கசிந்தது. தேசியத் தகவல் மையம் அனுப்பிய மின்னஞ்சலிலும் இது ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தத் தகவலை உயா்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளத் தவறி விட்டது’ என்று கூறியது.
தொழில்நுட்பச் சிக்கல் குறித்து காவல் துறை அறிந்தவுடன், முதல் தகவல் அறிக்கை இடம்பெற்ற பக்கம் முடக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் விவரங்களை தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கசியவிட்டதற்குக் காரணமானவா்கள் மீது மற்றொரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை உயா்நீதிமன்றம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டிருந்தது.