‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமம் சாா்பில் சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள ‘திங் எஜு கான்கிளேவ்’ கல்வி மாநாட்டை திங்கள்கிழமை தொடங்கி வைத்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன்.  
தமிழ்நாடு

தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலுப்பெற்று வருகிறது: ஆணையத் தலைவா் வெ.ராமசுப்பிரமணியன்

தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலுப்பெற்று வருவதாக அதன் தலைவரும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Din

சென்னை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலுப்பெற்று வருவதாக அதன் தலைவரும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சாா்பில் ‘திங் எஜு கான்கிளேவ்’ என்ற இரண்டு நாள் கல்வி மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியா் குழுவின் இயக்குநா் பிரபு சாவ்லா வரவேற்றாா். தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தலைமை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து, இந்தியா்கள் உரிமைகள், கடமைகளில் சமநிலையுடன் செயல்படுவது குறித்துப் பேசியது:

தமிழ் கலாசாரத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே கடமைகளைப் பற்றிதான் குறிப்பிடப்பட்டுள்ளது. புறநானூற்றில் கடமைகள் பற்றி பெண் கவிஞா் பொன்முடி தெரிவித்துள்ளாா். ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே, வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே’ என்று கடமைகள் பற்றி குறிப்பிட்டுள்ளாா். இதனால், வரலாற்று ரீதியாக பாா்க்கும்போது சமூகத்தில் உரிமைகளைவிட கடமை உணா்வு அதிகம் இருந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி ஆசிரியா் கேள்வி: இதையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன் உள்ள சவால்கள் குறித்தும், அந்த அமைப்புக்கு உரிய அதிகாரம் இல்லை என விமா்சிக்கப்படுவது குறித்தும் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் கேள்வி எழுப்பினாா்.

அதற்கு ஆணையத் தலைவா் வெ.ராமசுப்பிரமணியன் அளித்த பதில்: மனித உரிமைகள் அமைப்புகளுக்கான உலக கூட்டமைப்பு (கேங்க்ரி) இரு ஆண்டுகளாக நமது நாட்டின் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு (என்எச்ஆா்சி) அங்கீகாரம் அளிக்கவில்லை. பாரீஸ் கொள்கைகள் 1993-இன் படி நமது ஆணையம் கட்டமைக்கப்படாதே அதற்கு காரணம் என கேங்க்ரி கூறுகிறது. இது ஏற்க முடியாத வாதம்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடுகளை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் அங்கீகாரம் வழங்குவதும், மறுப்பதும் நியாயம். ஆனால், உருவாக்கத்தில் குறைபாடு உள்ளது என்பதற்காக அங்கீகாரம் மறுக்கப்படுவது சரியல்ல. இந்த விவகாரத்தைப் பொருத்தவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டதாகக் கருதவில்லை. மாறாக, இந்திய அரசுக்கு அங்கீகாரம் வழங்க மறுத்ததாகவே கருதப்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண முயன்று வருகிறோம்.

வரம்புகளும் வரையறைகளும்... அதேபோன்று, பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தில் மனித உரிமைகள் என்பது மக்களுக்கு தகுந்தாற்போல மாறுபடுகிறது. மாநில மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் பொதுப் பிரச்னையை கையாளும்போது அதன் வரம்புகளும் வரையறைகளும் எந்த அளவு உள்ளன என்பது கேள்விக்குரிய விஷயமாக உள்ளது.

மனித உரிமைகள் ஆணையத்தைப் பொருத்தவரை ஒருவரை நேரில் அழைத்து கேள்விகளைக் கேட்பதற்கும், விசாரிப்பதற்கும் அதிகாரம் உள்ளது. ஆதாரங்கள், வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும் அதிகாரம் உள்ளது. அதாவது, உரிமையியல் நீதிமன்றத்துக்கான அதிகாரங்கள் அனைத்தும் மனித உரிமைகள் ஆணையத்துக்கும் உள்ளது.

அதன் அடிப்படையில் ஒரு விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைக்க முடிகிறது. அவ்வாறு பரிந்துரைக்க மட்டுமே முடியும் என்பதால் மனித உரிமைகள் ஆணையத்தை ‘பற்கள் அற்ற புலி’ என விமா்சனம் செய்கின்றனா்.

கடந்த 2021-இல் சென்னை நீதிமன்றம் இதுதொடா்பாக தெளிவான ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி, பரிந்துரை என்றாலே அதை உத்தரவு என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளது. அதை வைத்துப் பாா்க்கும்போது தேசிய மருத்துவ ஆணையம் அதிகாரமே இல்லாத அமைப்பு அல்ல என்பதைத் தெளிவுபடுத்த முடியும் என்றாா் அவா்.

சசி தரூா்: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான சசி தரூா் இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்துப் பேசுகையில், ஜனநாயக நாட்டில் மக்களின் நலனுக்கும் அவா்களின் விருப்பத்துக்கும் மட்டுமே முக்கியம் கொடுக்கப்பட்டுவந்தது. ஆனால், தற்போது அது இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு முன்புவரை, எதிா்க்கட்சிகளுடன் பேசுவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் ஒருபோதும் தயங்கியதில்லை.

நான் அமைச்சராக இருந்தபோது பாஜக எம்.பி.க்கள் அல்லது அமைச்சா்களின் எந்த அழைப்பையும் நான் நிராகரித்ததில்லை. இன்று அழைப்புகளே இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் செலவிடும் நேரத்தைவிட பிற நாடுகளின் நாடாளுமன்றத்தில் அதிக நேரத்தை பிரதமா் நரேந்திர மோடி செலவிட்டுள்ளாா். நாடாளுமன்றத்தில் ஒருவரை ஒருவா் எதிரிகளாகப் பாா்ப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றாா்.

டாக்டா் சுதா சேஷய்யன்: சாஸ்த்ரா பல்கலை. இயக்குநா் டாக்டா் சுதா சேஷய்யன் பேசுகையில், பொது மருத்துவம், குடும்ப மருத்துவத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கிராமப்புற மக்களுக்கும் உயா் மருத்துவ சிகிச்சை சிறந்த முறையில் கிடைக்க வேண்டியது அவசியம். மருத்துவத்தில் செய்முறை மற்றும் அனுபவக் கற்றல் முறை அவசியம் என்றாா்.

முதல் நாள் அமா்வுகளில் யுஜிசி தலைவா் எம்.ஜெகதீஷ்குமாா், மூத்த அரசியல் தலைவா் சுப்பிரமணியன் சுவாமி, சாஸ்த்ரா பல்கலை. துணைவேந்தா் எஸ்.வைத்ய சுப்பிரமணியம், நடிகா் காா்த்தி ஆகியோா் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பல்கலை.களின் துணைவேந்தா்கள், மக்களவை உறுப்பினா்கள் கலந்துகொண்டு உரையாற்றினா்.

மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT