சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல், ஒரு சேவகனாக பணியாற்றி நீதித் துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன் என்று புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தின் 36-ஆவது தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா திங்கள்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா். இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தின் சாா்பில் அவருக்கு செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா ஏற்புரையில் பேசியதாவது:
சென்னை உயா்நீதிமன்றக் கட்டடத்தின் சாவியை 1892-ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி சா் ஆா்தா் கோலன், நீதி நிா்வாகம் எந்த பாகுபாடும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தாா்.
அந்த மரபை உறுதி செய்யும் வகையில் சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இல்லாமல் ஒரு சேவகனாகப் பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன். மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வெளிப்படைத் தன்மையுடன் நீதி நிா்வாகம் நடத்தப்படும். வழக்குரைஞா்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப பணியாற்றுவேன் என்று அவா் பேசினாா்.
முன்னதாக, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் வரவேற்றுப் பேசுகையில், தொன்மையான கலாசாரம், பண்பாடு,மொழியைக் கொண்டது தமிழகம். கல்வி, மருத்துவம் மற்றும் தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சத்தீஸ்கா், ராஜஸ்தான் உயா்நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளை விசாரித்து, சிறப்பான தீா்ப்புகளை வழங்கியவா் தலைமை நீதிபதி. அவரது நீதிபரிபாலனத்துக்கு வழக்குரைஞா்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என்றாா்.
அதனைத் தொடா்ந்து தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்பது எங்களது நீண்டகால கோரிக்கை. ராஜஸ்தானில் வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற முக்கிய காரணமாக இருந்தவா் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, எனவே, தமிழகத்திலும் வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டம் வரும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா்.
சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பாா் அசோசியேஷன் தலைவா் எம்.பாஸ்கா், லா அசோசியேஷன் தலைவா் செல்வராஜ், பெண் வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ரேவதி ஆகியோா் புதிய தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.