தருமபுரி: தருமபுரி அருகே சாலையோர இருந்த வீட்டின் மீது அரசுப் பேருந்து மோதியதில், அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.
தருமபுரி அருகே உள்ள உழவன்கொட்டாய் கிராமத்திலிருந்து புதன்கிழமை காலை, அரசு நகரப் பேருந்து ஒன்று தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தது.
பேருந்தை தேவராஜ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்ட இழந்த பேருந்து, சாலை அருகில் இருந்த ராமு என்பவரது வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த, நரசிம்மமன்-சோனியா தம்பதியின் மகள் அத்விகா (3) என்ற சிறுமி படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு 108 மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியை பரிசோதிக்க மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
பெரும்பாலும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படுபவை காலாவதியான பேருந்துகளாக இருப்பதால், அடிக்கடி இது போன்று விபத்துகள் ஏற்படுகின்றன. அரசு பேருந்துகளில் சுமார் 50 சதவீத பேருந்துகள் ஓட்டுவதற்கே தகுதியற்ற வகையில் காலாவதியானவை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனவே பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை இயக்க வேண்டும். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறி, உழவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து தருமபுரி அதியமான் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.
இந்த விபத்தில் ஓட்டுநர் தேவராஜும் காயம் அடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனைக்கு வந்த சிறுமியின் உறவினர்களில் சிலர், சிறுமி உயிரிழந்த துக்கம் தாளாமல், ஆத்திரத்தில் ஓட்டுநர் தேவராஜை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.