கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, ஆரம்பாக்கத்தில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் ஒடிசாவைச் சேர்ந்த நபரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி கடந்த 12ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்த ஒடிசா மாநிலத்தவன் என்று கூறப்படும் 30 வயதிற்கு உட்பட்ட நபர் வெள்ளிக்கிழமை சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை காவல் நிலையத்தில் குற்றவாளி மீதான விசாரணை இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.
ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு 14 நாள்கள் கழித்து வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டவர் சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறுமியால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளி கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்ட நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், தனிப்பட்ட முறையில், அந்த நபரிடம் விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பல சிரமங்களுக்கிடையே குற்றவாளி கைது செய்யப்பட்டு, அவர்தான் குற்றவாளி என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைதான நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்று அவர் தெரிவித்த நிலையில், 30 வயதிற்கு உள்பட்ட அவரிடம் முதல் கட்ட விசாரணை முடிந்துள்ளது என்றும், அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் விரிவான விசாரணைக்கு பிறகு குற்றவாளி குறித்து முழுமையான தகவல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ உள்ளிட்ட மூன்று டிஎஸ்பி தலைமையில் குற்றவாளியிடம் இரண்டாம் கட்ட விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் கவரப்பேட்டை காவல் நிலையம் முழுக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் உள்ளனர். காவல் நிலையத்திற்குள் மக்கள், செய்தியாளர்கள் என யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பாலியல் குற்றவாளி குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.