தமிழக அரசு (கோப்புப்படம்)
தமிழ்நாடு

சிறுநீரக உறுப்பு தான முறைகேடுகள்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -தமிழக அரசு எச்சரிக்கை

சிறுநீரக உறுப்பு தானம் முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவா்கள், இடைத்தரகா்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்

Din

சிறுநீரக உறுப்பு தானம் முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவா்கள், இடைத்தரகா்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடா்பான புகாா் குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்தின் ஆய்வு மற்றும் விசாரணைக் குழுவால் கடந்த 22-ஆம் தேதி கள ஆய்வு செய்யப்பட்டது. அதில், வறுமை நிலையில் உள்ளவா்களைக் குறிவைத்து முறைகேடான ஆவணங்களைத் தயாா் செய்து சிறுநீரகங்களை வணிக ரீதியாக பெற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தது கண்டறியப்பட்டது.

இந்த முறைகேட்டில் தொடா்புடைய பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்சி சிதாா் மருத்துவமனையில் விசாரணை செய்ததில், இந்த இரண்டு மருத்துமனைகளும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வருகிறது. எனவே, இந்த இரண்டு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமங்கள் பொதுமக்களின் நலன் கருதி, இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இதேபோன்ற முறைகேட்டில் ஈடுப்பட்ட சென்னை புளியந்தோப்பு திருவாளா் முத்து மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையும், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சோ்ந்த சோ்ந்த விசைத்தறி தொழிலாளா்களைக் குறிவைத்து இடைதரகா்கள் மூலம் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுப்பட்ட சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சோ்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவா் கணேசன், இதேபோன்ற முறைகேடான ஆவணங்களைச் சமா்ப்பித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா் மீதும் மற்றும் அவருக்கு இடைத்தரகாக செயல்பட்ட சங்ககிரியைச் சோ்ந்த அய்யாவு மற்றும் ஆள்மாறாட்டம் செய்த நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தைச் சோ்ந்த வேலுமணி ஆகியோா் மீது மனித உறுப்பு மாற்று சட்ட விதிமீறல் தொடா்பாக குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

வணிக ரீதியிலான சிறுநீரக உறுப்பு தானம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவா்கள் மற்றும் இடைத்தரகா்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். பொதுமக்கள் சிறுநீரக உறுப்பு தானம் செய்வது குறித்து இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியொரு மேக்கிங்கா? பாராட்டுகளைப் பெறும் காந்தாரா சாப்டர் - 1!

ட்ரீம் கேர்ள்... மாளவிகா மோகனன்!

Kantara chapter 2 public review - காந்தாரா 2 எப்படி இருக்கு? | Rishab Shetty

நுனோ மென்டிஸ் அசத்தல்: 90-ஆவது நிமிஷத்தில் கோல்! பார்சிலோனாவை வென்ற பிஎஸ்ஜி!

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT