DOTCOM
தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 7% குறைவு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் இதுவரை, இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளது.

Din

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் இதுவரை, இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை 1 முதல் சனிக்கிழமை (ஜூலை 27) வரை இயல்பாக 108.6 மி.மீ. பெய்ய வேண்டும். ஆனால், நிகழாண்டில் 101.3 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பைவிட 7% குறைவு. எனினும், தமிழகத்தில் மாவட்டம் வாரியாக ஒருசில மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலியில் 164.3 மி.மீ. (339 சதவீதம் அதிகம்), தென்காசியில் 184.5 மி.மீ. (125 சதவீதம் அதிகம்), தேனியில் 144.5 மி.மீ. (96 சதவீதம் அதிகம்), கோவையில் 573.2 மி.மீ. (60 சதவீதம் அதிகம்) மழை பெய்துள்ளது.

இதே காலகட்டத்தில் சென்னையில் இயல்பாக 152.3 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், நிகழாண்டில் இயல்பைவிட 30 சதவீதம் அதிகமாக 198.4 மி.மீ. மழை பெய்துள்ளது. மிகவும் குறைவாக தூத்துக்குடியில் 0.4 மி.மீ. (97 சதவீதம் குறைவு), கரூரில் 2.2 மி.மீ. (95 சதவீதம் குறைவு), திருச்சியில் 8.7 மி.மீ. (87 சதவீதம் குறைவு) மழை பெய்துள்ளது.

வானிலை நிலவரம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) முதல் ஆக. 1-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

120 மி.மீ.: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சின்னக்கல்லாறு (கோவை) 80 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:  இதற்கிடையே, ஞாயிறு, திங்கள்கிழமை (ஜூலை 27, 28) தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT