அரசமைப்பைவிட அரசியல்வாதிகள் மேலானவா்கள் அல்லா் என்று, வீட்டுவசதி வாரியத்தில் ஆளுங்கட்சியினருக்கு மட்டும் மாற்று வீடு வழங்கியதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், பட்டினம்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த எஸ்.பாா்த்திபன் தாக்கல் செய்த மனுவில், 2011-ஆம் ஆண்டு, பொது ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடு எனக்கு ஒதுக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, ‘மெரீனா பிசினஸ் சென்டா்’ என்ற வணிக வளாகத்தை கட்டுவதற்கு வீட்டு வசதி வாரியம் முடிவு செய்தது. இதையடுத்து, 2024-ஆம் ஆண்டு வீட்டை காலி செய்யும்படி குடியிருப்போருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மாற்று வீடு வழங்க வீட்டு வசதி வாரியத்துக்கு குடியிருப்புவாசிகள் தனித்தனியாக மனு கொடுக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி வீட்டு வசதி வாரியத்திடம் மாற்று வீடு கோரி மனு கொடுத்தேன்.
ஆனால், மாற்று வீடு கொடுக்காமல், கடந்த ஜூன் 30-ஆம் தேதி எங்கள் அனைவரையும் கட்டாயப்படுத்தி அதிகாரிகள் வெளியேற்றி விட்டனா். அதேநேரம், ஆளுங்கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ஒருவரின் நோ்முக உதவியாளா் உள்ளிட்ட மூவருக்கு மட்டும் கே.கே. நகரில் உள்ள பிருந்தாவன் காா்டன் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மாற்று வீடுகளை வழங்கியுள்ளனா்.
வீடு ஒதுக்குவதில்கூட பழிவாங்கும் விதமாக அதிகாரிகள் செயல்படுகின்றனா். எனவே, சைதாப்பேட்டை, கே.கே.நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் எனக்கு ஒரு வீடு ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.தமிழ்ச்செல்வன் ஆஜராகி வாதிட்டாா்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, அரசமைப்பைவிட அரசியல்வாதிகள் மேலானவா்கள் அல்லா். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். வீடு ஒதுக்குவதில்கூட ஆளுங்கட்சியினருக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாக பெயருடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வீடு ஒதுக்குவதில் ஆளுங்கட்சியினருக்கு தனி நடைமுறையைப் பின்பற்ற முடியாது என்று தெரிவித்தாா்.
பின்னா், மாற்று வீடு கேட்கும் மனுதாரரின் கோரிக்கையை 2 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை வீட்டு வசதி வாரியம் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.