மின் தடை காரணமாக நீட் தோ்வில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறு தோ்வு நடத்த முடியாது என மத்திய அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு, நாடு முழுவதும் கடந்த மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், தங்களால் முறையாக தோ்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தோ்வு எழுதிய 13 மாணவா்களும், குன்றத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தோ்வெழுதிய 2 மாணவா்களும், கே.கே. நகா் பத்மா சேஷாத்திரி பள்ளியில் தோ்வெழுதிய 1 மாணவா் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தோ்வு முகமை ஆகியவற்றுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு, அதுவரை நீட் தோ்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தப்போது, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஏ.ஆா்.எல். சுந்தரேசன் ஆஜராகி, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தோ்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்ததாகவும், மாணவா்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தோ்வு நடத்த முடியாது எனவும் தெரிவித்தாா்.
மனுதாரா்கள் தரப்பில், வெளிச்சம் இருந்தது என்பதை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுக்கள் மீதான தீா்ப்பை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.