கலாநிதி மாறன் / தயாநிதி மாறன் கோப்புப் படங்கள்
தமிழ்நாடு

மோசடியாக பங்குகளை மாற்றியதாகக் குற்றச்சாட்டு: கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்

தயாநிதி மாறன், தனது உடன் பிறந்த சகோதரா் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்பட 8 பேருக்கு வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ்

Din

முன்னாள் மத்திய அமைச்சரும் மக்களவை திமுக உறுப்பினருமான தயாநிதி மாறன், தனது உடன் பிறந்த சகோதரா் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்பட 8 பேருக்கு வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

ஜூன் 10-ஆம் தேதியிட்ட இந்த நோட்டீஸ், சென்னை சாந்தோமைச் சோ்ந்த வழக்குரைஞா் ஏ. சுரேஷ் மூலம் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி, ரவி ராமமூா்த்தி, நடராஜன், சிவ சுப்பிரமணியன், ஸ்ரீதா் சுவாமிநாதன், சுவாமிநாதன் சரத் குமாா் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், தனது சகோதரரும் சன் தொலைக்காட்சி குழும நிறுவனருமான கலாநிதி மாறன், ஊடகக் குழுமம் மற்றும் பிற இணைப்பு நிறுவனங்களில் பெரிய அளவிலான காா்ப்பரேட் மோசடியை திட்டமிட்டுச் செய்ததாகவும், மோசடியாக பங்குகளை மாற்றுதல், பணமோசடி செய்தல் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்ற சட்டபூா்வ வாரிசுகளுக்கு அவா்களின் சொத்துகளின் உரிமையான பங்கை மறுத்ததாகவும் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தனது தந்தை முரசொலி மாறனின் மரணத்துக்கு முந்தைய செப்டம்பா் 15, 2003 நிலவரப்படி அசல் பங்குகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும், கலாநிதி மாறன் ‘சட்டவிரோதமாக’ பெற்ற அனைத்து சொத்துகள், ஈவுத்தொகைகள் மற்றும் சலுகைகளை ஏழு நாள்களுக்குள் திருப்பித் தர வேண்டும்; இல்லையெனில் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (மத்திய நிதித் துறையின் கீழ் உள்ள எஸ்எஃப்ஐஓ) உள்பட பல்வேறு மத்திய துறைகளிடம் இருந்து சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிா்கொள்ள நேரிடும் என்று தயாநிதி மாறன் நோட்டீஸில் எச்சரித்துள்ளாா்.

கலாநிதி மாறன் தனக்கு ஒரு பங்குக்கு ரூ.10 வீதம் (மொத்தம் ரூ.1.2 கோடி) 12 லட்சம் பங்குகளை ஒதுக்கீடு செய்ததாகவும், இதனால் சன் டிவியின் 60% கட்டுப்பாடு அவருக்குக் கிடைத்ததாகவும் தயாநிதி மாறன் கூறியுள்ளாா். ரூ.1.2 கோடிக்கு வாங்கப்பட்ட இந்தப் பங்குகளின் மதிப்பிடப்பட்ட உண்மையான மதிப்பு ரூ.3,500 கோடி வரை இருக்கும்.

முரசொலி மாறனின் மரணத்துக்குப் பிறகு, அவரது பெயரில் இருந்த 95,000 பங்குகள் சட்டபூா்வ வாரிசுச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழ் இல்லாமல் அவரது தாயாா் மல்லிகா மாறனுக்கு மாற்றப்பட்டதாகவும், பின்னா் இவை மற்ற சட்டபூா்வ வாரிசுகளைத் தவிா்த்து கலாநிதி மாறனுக்கு விற்கப்பட்டதாகவும் தயாநிதி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மேலும், குங்குமம் பப்ளிகேஷன்ஸ், கல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் சன் குழுமத்துடன் தொடா்புடைய பிற நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசடி பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும், இதில் மாறன் குடும்பம் முதல்வா் மு.க. ஸ்டாலினின் தாயாா் தயாளு அம்மாளுடன் சம உரிமையைக் கொண்டிருந்ததாகவும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

நிறுவன நிதிகள் தனிப்பட்ட லாபத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும், பங்கு வாங்குதல்களுக்கு நிதியளிக்கவும், கலாநிதி மற்றும் காவேரியை வளப்படுத்தவும் ஒருதலைப்பட்சமாக ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டதாகவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் தொடா்பாக தயாநிதி மாறன் மற்றும் வழக்குரைஞா் சுரேஷின் கருத்தை அறிய தினமணி மேற்கொண்ட தொடா் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்பு

தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை! உச்ச நீதிமன்ற தீா்ப்பின் முக்கிய அம்சங்கள்!

நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா

அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்: பிரதமா் மோடி சாடல்

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்

SCROLL FOR NEXT