திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பலியான முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகை, ரூ. 15 லட்சம் நிதியுதவிவை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராமம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா இன்று (ஜூன் 19) காலை 11.45 மணியளவில் TN 45 G 1798 என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதியதில் முசிறி வருவாய் கோட்டாட்சியரின் நான்குசக்கர வாகனம் நிலைதடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.
முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா அவர்களின் உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஆரமுத தேவசேனா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆரமுத தேவசேனா அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ. 1 கோடி பெற்று வழங்கப்படும்.
மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: அரசு ஜீப் மீது பேருந்து மோதியதில் பெண் கோட்டாட்சியர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.