வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாய் கண் முன்னே, சிறுத்தை வெள்ளிக்கிழமை மாலை கவ்விச் சென்ற நிலையில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
6 வயது சிறுமியை தாய் கண்முன்னே சிறுத்தை கவ்விச்சென்ற நிலையில், நேற்று மாலை முதல் ட்ரோன் உதவியுடன் தீவிர தேடுதல் பணியில் காவல் துறையினரும் வனத்துறையினரும் ஈடுபட்டு வந்தனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று காலை, சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றதில், சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு உள்ள காளியம்மன் கோவில் அருகே தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மணோஜ்முந்தா மற்றும் மோனிகா தேவி தம்பதியரின் மகள் ரோஷினியை தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தூக்கிச் சென்றது.
திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் குழந்தையின் தாய் அலறி அடித்துக் கொண்டு சப்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஓடி வந்து, குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து வந்த காவல் துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து தேடும் பணியில் இரவு முதல் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை வனத் துறை மற்றும் காவல் துறையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடும்பணியை தீவிரப்படுத்தி தேடி வந்தனர். இந்நிலையில் சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள யூகலிப்டஸ் அடர்ந்த காடுகள் பகுதிக்கு சிறுமியை கவ்வி கொண்டு சென்ற சிறுத்தை, அங்கு குழந்தையின் உடலை தின்றுள்ளது. பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்த சிறுமியின் உடல் பாகங்களை மீட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் தாய் நான்கு வயது என்று கூறிய நிலையில் குழந்தையின் வயது ஏழு என்பது ஆதார் கார்டு மூலம் தற்பொழுது உறுதி செய்யப்பட்டு உள்ளது. குழந்தையை சிறுத்தை தாக்கி கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க.. ஈரானையே உலுக்கிய இஸ்ரேலின் பெண் உளவாளி! தடயமே இல்லாமல் மாயமான கதை!!
இதையும் படிக்க.. ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.