திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் சாலை மறியல் ஈடுபட்ட 150 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலில் கடைமடை பகுதியான வெள்ளக்கோவில் பகுதிக்கு பாசன நீர் சரியான அளவில் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும், சமச்சீர் பாசனத்தை வலியுறுத்தியும் இப்பகுதி விவசாயிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கயம் - வெள்ளக்கோவில் பகுதி பிஏபி பாசன விவசாயிகள், பொள்ளாச்சியில் உள்ள பிஏபி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக காங்கேயத்திலிருந்து கிளம்பிச் செல்லத் தயாராகினர்.
இதனையொட்டி, காங்கயம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பகவதிபாளையம் பிரிவு அருகே இது குறித்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை விளக்கிப் பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர், பொள்ளாச்சி செல்வதற்குத் தயாரானபோது அங்கு காங்கயம் காவல் துறை அனுமதி மறுத்து, அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்பு இருந்த கரூர் - காங்கயம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தொடர்ந்து காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து, ஊதியூர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 50 பெண்கள் உட்பட 150 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.