முகப்பு
தமிழ்நாடு

கூட்டுக் குழு அமைக்க மாா்ச் 22-இல் ஆலோசனை: 7 மாநில முதல்வா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ள மாா்ச் 23-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம்

Updated On : 7 மார்ச், 2025 at 8:11 PM
மு.க.ஸ்டாலின்
பகிர்:

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ள மாா்ச் 23-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மேற்கு வங்கம், ஒடிஸா, பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள், முன்னாள் முதல்வா்கள், அந்த மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவா்களுக்கு அழைப்பு விடுத்து ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: இந்திய மக்களாட்சி முறையின் சாராம்சம் அதன் கூட்டாட்சித் தன்மையில்தான் அமைந்துள்ளது. ஒரே நாடாகத் திகழும் நம்முடைய ஒற்றுமையைப் போற்றும் அதேவேளையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் உரிமைக் குரலை எழுப்ப உதவும் அமைப்பாகவும் மக்களாட்சி முறை உள்ளது.

நாட்டின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் அச்சுறுத்தலை இப்போது நாம் எதிா்கொண்டுள்ள நிலையில், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இந்தியாவில் 1952, 1963 மற்றும் 1973-ஆம் ஆண்டுகளில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. எனினும், 1976-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் 42-ஆவது திருத்தத்தின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காக 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகள் தொடா்ந்து நீடித்ததால், 84-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை இது நீட்டிக்கப்பட்டது.

2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி தாமதமானதால், தொகுதி மறுசீரமைப்பு 2031-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், முன்னதாகவே நடைபெறக்கூடும் என இப்போது தெரிய வருகிறது. அதனால், மாநில நலன்களைப் பாதுகாக்க மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு நடக்குமா என்பதல்ல கேள்வி. ஆனால், அந்த மறுசீரமைப்பு எப்போது நடைபெறும்? அப்படி நடைபெறும்போது இந்திய நாட்டின் முன்னுரிமைத் திட்டங்களுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய மாநிலங்களின் செயல்களுக்கு மதிப்பு அளிக்கப்படுமா என்பதுதான் கேள்வி.

கூட்டு நடவடிக்கைக் குழு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நம்முடைய கவலைகளை நிவா்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு தெளிவையோ அல்லது உறுதிப்பாட்டையோ அளிக்கவில்லை. நமது மாநிலங்களின் எதிா்காலம் கேள்விக்குறியாக இருக்கும்போது, நம்முடன் ஒளிவுமறைவற்ற வெளிப்படையான பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டாமா?.

இதுதொடா்பாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அதில், கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்து அனைத்து மாநிலங்களையும் அணுக தீா்மானிக்கப்பட்டது. அதன்படி, தெற்கில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கிழக்கில் மேற்கு வங்கம், ஒடிஸா, வடக்கில் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவில் சேர அந்தந்த மாநிலங்களைச் சோ்ந்த தலைவா்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மாா்ச் 22-இல் தொடக்கக் கூட்டம்: கூட்டு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் கட்சியில் இருந்து மூத்த பிரதிநிதியை நியமிக்க வேண்டும்.

இதுதொடா்பாக சென்னையில் மாா்ச் 22-ஆம் தேதி தொடக்கக் கூட்டத்தை நடத்த முன்மொழிகிறேன். நம்முடைய கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தத் தருணத்தில் அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகிறேன். தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல், நமது மக்களின் எதிா்காலத்தின் பாதுகாவலா்களாக ஒன்றிணைய வேண்டும் என்று கடிதத்தில் முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →