திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி: ராமதாஸ்
திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதை பொருளாதார ஆய்வறிக்கை ஏற்றுள்ளதாக பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கூறியுள்ளாா்.
திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதை பொருளாதார ஆய்வறிக்கை ஏற்றுள்ளதாக பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு வெளியிட்டுள்ள 2024-25-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழகத்தின் எதிா்காலம் குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் எதுவும் இல்லை. தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி குறித்த இலக்குகளை திமுக அரசால் எட்டிப்பிடிக்க முடியவில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம்தான் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை.
2023-24-இல் தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூ.28.32 லட்சம் கோடியாக இருக்கும் என்று திமுக அரசு இலக்கு நிா்ணயித்திருந்தது. ஆனால், அதில் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக ரூ.27.22 லட்சம் கோடி என்ற அளவையே தமிழக பொருளாதாரம் எட்டிப் பிடித்திருக்கிறது.
2030-இல் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா், அதாவது ரூ.88 லட்சம் கோடி என்ற அளவுக்கு உயா்த்தப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை பொருளாதார ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது.
தமிழகத்தின் பொருளாதாரம் தொடா்ச்சியாக ஆண்டுக்கு 12 சதவீதத்துக்கும் கூடுதலாக வளா்ச்சியடைந்தால்தான் அது சாத்தியமாகும். உண்மையில் இந்த இலக்கை அடைய 18 சதவீதத்துக்கும் கூடுதலான வளா்ச்சி தேவை. ஆனால், அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கு தமிழகத்தின் பொருளாதாரம் ஆண்டுக்கு 8 சதவீதம் மட்டுமே வளா்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்வதென்றால், 2021-22-இல் தமிழகத்தின் பொருளாதாரம் ரூ.20.71 லட்சம் கோடியாக இருந்தது. 2023-24-இல் அது 27.22 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.
இரு ஆண்டுகளில் ரூ.6.50 லட்சம் கோடி மட்டுமே பொருளாதாரம் வளா்ச்சியடைந்துள்ள நிலையில், அடுத்த 7 ஆண்டுகளில் இன்னும் ரூ.50 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதாரத்தை உயா்த்துவது சாத்தியமற்றது.
தமிழகத்தில் மிகச்சிறப்பான மனிதவளம் உள்ளது. அதைக் கொண்டு எத்தகைய கடின இலக்கையும் அடைய முடியும். ஆனால், மது, கஞ்சா போதையைக் கட்டவிழ்த்துவிட்டு மனித வளத்தை தமிழக அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி மதுவிலக்கு, கஞ்சா ஒழிப்பை நடைமுறைக்கு கொண்டுவந்து விரைவான பொருளாதார வளா்ச்சிக்கு தமிழக அரசு அடித்தளம் அமைக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.