மதுரை: சங்கரன்கோவிலில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருவேங்கடம் உடைப்பன்குளம் பகுதியில் கடந்த 1.1.2014இல் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒரு சமூகத்தினா் வசிக்கும் பகுதியில், மற்றொரு சமூக இளைஞா்கள் பட்டாசு வெடித்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் உருவானது.
இந்நிலையில் உடைப்பன்குளம் கீழத்தெருவைச் சோ்ந்த காளிராஜ் (55), கோவை மாவட்டம், துடியலூரைச் சோ்ந்த வேணுகோபால் (42), முருகன் (42) ஆகியோா் மோட்டாா் சைக்கிளில் திருவேங்கடம் சித்தமருத்துவமனை அருகே சென்றபோது மர்மநபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
இதுதொடா்பாக திருவேங்கடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருவேங்கடத்தைச் சோ்ந்த பொன்னுமணி (34), குட்டிராஜ் என்ற பரமசிவன் (44), குருசாமி (49), காளிராஜ் என்ற தங்கராஜ் (56), முத்துக்கிருஷ்ணன் (55), உலக்கண் என்ற முத்துசாமி (56), கண்ணன் (60), பாலமுருகன் (56), கண்ணன் (36), சுரேஷ் (46), கண்ணன் (40) உள்பட 25 பேரை போலீஸார் கைது செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை காலத்தில் ஜெயராம், பொன்ராஜ், சரவணன் ஆகியோா் உயிரிழந்தனர்.
இவ் வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, 11 போ் குற்றவாளிகள் எனவும், அவா்களுக்கான தண்டனை விவரத்தையும் அறிவித்தாா்.
இதையும் படிக்க: மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் விபத்து: ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்!
அதில், பொன்னுமணி, குருசாமி, காளிராஜ் என்ற தங்கராஜ், முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும், உலக்கண், கண்ணன் (38), கண்ணன் (60), பாலமுருகன், குட்டிராஜ் என்ற பரமசிவன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், தலா ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதமும், கண்ணன் (40), சுரேஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஒரேநேரத்தில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், இன்று(மார்ச் 20) இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், ”குற்றத்தின் தன்மை மரண தண்டனை விதிப்பதற்கு போதுமானதாக இல்லை. உச்ச நீதிமன்றம் விதித்துள்ள அளவுகோள் இவ்வழக்கில், மரண தண்டனை விதிக்க போதுமானதாக இல்லை” என்று தெரிவித்து, 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.