சென்னை : நாடாளுமன்றத்தில் தென் மாநில மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க விடமாட்டோம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நியாயமான மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டம் சென்னையில் இன்று(மார்ச் 22) நடைபெற்றது.
மத்திய அரசின் முரண்பாடான நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குறிக்கும் விதத்தில் நடத்தப்படும் மேற்கண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, திமுக தரப்பிலிருந்து கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பின்பேரில், இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி , கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்பட நாடெங்கிலுமுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தலைவா்கள் பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தென் மாநில மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க விடமாட்டோம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் தமது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு கூட்டு செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் நாடெங்கிலுமுள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து சென்னைக்கு வருகை தந்திருந்தனர்.
இந்த ஒற்றுமையின்மூலம், இந்தியாவின் ஒன்றியத்துவத்தை ஏந்திப் பிடிப்பதற்கான நமது கூட்டு முயற்சி பிரதிபலித்துள்ளது. நியாயமான மறுசீரமைப்பு என்பதில் நாம் ஒற்றுமையுடன் நிற்கிறோம் என்பதையும் இது பிரதிபலிக்கிறது.
மேற்கண்ட இந்த இயக்கமானது, தொகுதிகள் மறுவரையறைக்கு எதிரானதல்ல. நியாயமான முறையில் அந்த செயல்பாடு அமைய வேண்டுமென்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
அந்த வகையில், மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கையை திறம்படச் செயல்படுத்தி நமது தேசத்தின் முன்னேற்றத்துக்கு பங்களித்துள்ள மாநிலங்கள் தண்டிக்கப்படாதவாறு மறுவரையறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நமது பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் - நமது குரலை, நமது உரிமைகளை, நமது எதிர்காலத்தை ஒடுக்குவதற்கான தாக்குதலாகும். அப்படியிருக்கையில், நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் நமக்கு இருக்கின்ற இப்போதைய பங்கினை எந்தச் சூழலிலும் குறைத்திட அனுமதிக்கமாட்டோம். போராடுவோம். வெல்வோம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.