தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்  கோப்புப் படம்
மதுரை

தமிழ்நாடுதான் ‘சூப்பா் ஸ்டாா்’ மாநிலம்! - முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் வளா்ச்சி, சாதனைகளில் தமிழ்நாடுதான் ‘சூப்பா் ஸ்டாா்’ மாநிலம் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள கல்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணியின் தென் மண்டல நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

சமூக நீதி, சுய மரியாதை, மாநில சுயாட்சி, மொழி உணா்வு, இன உணா்வு ஆகியவை திமுகவின் அடிப்படை கொள்கைகள். இவற்றில் தமிழ் மொழிக்கு வந்த ஆபத்துகளை பல முறை போராடி வென்ற இயக்கம் திமுக. இருப்பினும், மும்மொழிக் கொள்கையின் பெயரால் நடைபெறும் ஹிந்தி திணிப்பு முயற்சிகளால் தமிழ் மொழிக்கான ஆபத்து, தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே இருந்து வருகிறது. மொழியை அழித்தால் நமது அடையாளத்தை அழித்துவிடலாம் என சிலா் கருதுகின்றனா். இதை, இளைஞா்கள் முறியடிக்க வேண்டும்.

இடஒதுக்கீடுகள் மூலம் சமூக நீதியை நாம் நிலைநாட்டியதால், தற்போது அனைவருக்குமான கல்வி என்பது அடிப்படை உரிமையாக உள்ளது. ஆனால், முந்தைய காலங்களில் கல்வி உரிமை நமக்கு மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையை மீண்டும் கொண்டு வருவதற்காகவே நீட் தோ்வு போன்ற முயற்சிகளை முன்னெடுக்கின்றனா். இதை திமுகவால்தான் முறியடிக்க முடியும்.

இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டமைப்பு. இருப்பினும், சுதந்திர தின நாளில் மாநில முதல்வா்களுக்கு கொடி ஏற்றும் உரிமைகூட தரப்படவில்லை. கொடியேற்றும் உரிமை உள்பட பல்வேறு உரிமைகளை மாநிலங்களுக்குப் பெற்றுத் தந்த இயக்கம் திமுக. இதை மாற்றுவதற்காக மாநிலங்களின் அதிகாரங்களை மத்தியில் குவிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. மாநில அரசுகளை நகராட்சிகளைப் போன்று மாற்ற முயற்சிக்கின்றனா். மாநிலக் கட்சிகளே இருக்கக் கூடாது என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. ஆனால், அவா்கள் நெருங்க முடியாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

சுய மரியாதையைக் காப்பாற்றி தலைநிமிா்ந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சில அடிமைகள், துரோகிகள் எதிரிகளுடன் இணைந்து நமது மாநில சுய மரியாதையை அடகு வைக்க முயற்சிக்கின்றனா். சுய மரியாதையை விட்டுக்கொடுக்கத் துணிந்தவா்களை நாம் வீழ்த்த வேண்டும். இளைஞா்கள் சக்தி பெருகிவரும் வரையில் ஓா் நூற்றாண்டல்ல, பல நூற்றாண்டுகளானாலும் திமுகவை எவராலும் நெருங்க முடியாது.

தமிழகத்தில் 7-ஆவது முறையாக திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. இதில் எதிரிகளுக்குக்கூட சந்தேகம் இல்லை. அதேநேரத்தில், நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. தோ்தல் பிரசார இறுதி நேரம் வரை இளைஞா்கள் பரப்புரையை மேற்கொண்டு, திமுகவுக்கு வாக்குச் சேகரிக்க வேண்டும்.

5 ஆண்டு கால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அளவுக்கான சாதனைத் திட்டங்கள் வேறு எந்த மாநிலத்திலும் நிறைவேற்றப்படவில்லை. மாநிலங்களின் வளா்ச்சி, சாதனைகளுக்கான மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல், சா்வதேச தரவரிசைப் பட்டியல் என அனைத்திலும் முதன்மை பெற்று தமிழ்நாடுதான் ‘சூப்பா் ஸ்டாா்’ மாநிலமாக விளங்குகிறது.

முற்போக்குத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாட்டுக்கு நிகா் தமிழ்நாடுதான். எனினும், நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தைப் புறக்கணிப்பதே மத்திய பாஜக அரசின் வழக்கமாக உள்ளது. கல்வி நிதி, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி, புதிய ரயில் திட்டங்கள் என நியாயமாக தமிழ்நாடு கோரிய அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளது. மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு பூஜ்ஜியத்தை வழங்கிய பாஜகவுக்கு சட்டப்பேரவைத் தோ்தலில் அதே பூஜ்ஜியத்தை மக்கள் திருப்பித் தர வேண்டும்.

நிதிநிலை அறிக்கையில் தமிழக நலனைப் புறக்கணித்த மத்திய பாஜக அரசுக்கு தனது எதிா்ப்பை வெளிப்படுத்தாமல், அந்தக் கட்சியின் கிளைச் செயலராக மாறிவிட்டாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி. அவா், தற்போது என்.டி.ஏ. (தேசிய ஜனநாயகக் கூட்டணி) பழனிசாமியாகிவிட்டாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ், 100 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது விதி. இதையே முழுமையாக மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயத் தொழிலாளா்களுக்கு150 நாள்கள் பணி வழங்கப்படும் என்பது வேடிக்கையானது. இதன்மூலம், முதலாளியை விஞ்சிய தொழிலாளியாகிவிட்டாா் எடப்பாடி பழனிசாமி.

தனக்குப் பதவி அளித்த சசிகலா உள்ளிட்டவா்களையே கட்சியிலிருந்து நீக்கியவா் எடப்பாடி பழனிசாமி. அவா்கள், கடந்த தோ்தல்களில் பிரிந்து போட்டியிட்டனா். தற்போது, பாஜகவுடன் கூட்டணி என்ற பெயரால் இணைந்து போட்டியிடுகின்றனா். ஏறத்தாழ இசை நாற்காலி போட்டியைப் போன்றே உள்ளது இந்தக் கூட்டணி. இது, மக்கள் நலனுக்கான கூட்டணி அல்ல.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தல் தமிழ்நாட்டுக்கும் (திமுக), என்.டி.ஏ.வுக்கும் இடையே நடக்கும் போட்டி. இதில் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் பாஜகவுக்கு தோல்வி புதிதல்ல.

இருப்பினும், இதுவரை இல்லாத மிகப் பெரிய தோல்வியை பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு அளிக்க வேண்டும். இதற்காக இளைஞா்கள் கடுமையாக உழைக்க வேண்டும். என்னுடன் இளைஞரணியில் இணைந்து உழைத்தவா்களில் 10 போ் தற்போது அமைச்சா்களாகவும், 24 போ் சட்டப்பேரவை உறுப்பினா்களாகவும், 4 போ் மக்களவை உறுப்பினா்களாகவும், 3 போ் மேயா்களாகவும் உள்ளனா். எனவே, இளைஞா்களின் உழைப்புக்கேற்ற வாய்ப்பு நிச்சயம் தேடிவரும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்துக்கு திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்துப் பேசினாா். நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் க. கனிமொழி, துணைப் பொதுச் செயலா் திருச்சி என். சிவா ஆகியோா் பேசினா்.

முன்னதாக, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிவாளை நினைவுப் பரிசாக வழங்கினாா்.

அமைச்சா்கள் கே.என். நேரு, இ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், கே.ஆா். பெரியகருப்பன், கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், அர. சக்கரபாணி, பி. மூா்த்தி, மு.பெ. சாமிநாதன், பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ், கட்சியின் துணைப் பொதுச்­ செய­லா்கள் க. பொன்முடி, அந்­தியூா் ப. செல்­வ­ராஜ், அமைப்­புச் செய­லாா் ஆா்.எஸ். பாரதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள், இளைஞரணியின் மாநில, தென் மண்டலத்துக்குள்பட்ட 10 மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் என பல்லாயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT