2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக யாருக்கு வாய்ப்புள்ளது? என்பதைப் பற்றி சி-வோட்டர் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர ஈடுபட தொடங்கிவிட்டதைக் காண முடிகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், 2026-ல் தமிழக முதல்வர் யார்? மக்கள், யாரை முதல்வராக்க விரும்புகிறார்கள்? என்று சி-வோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
யார் முதல்வர்?
சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் 27% வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
புதிதாக, தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் 18% ஆதரவுடன் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி 10% ஆதரவுடன் மூன்றாமிடமும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 9% ஆதரவுடன் நான்காமிடமும் பெற்றுள்ளனர்.
தலைவர்கள் பற்றிய கருத்துக்கணிப்புகள்!
தமிழக அரசின் செயல்பாடு பற்றிய கருத்துக்கணிப்பில் 15% பேர் தமிழக அரசின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக இருந்ததாகவும், 36% பேர் ஓரளவு திருப்தி என்றும், 25% பேர் திருப்தியில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 24% பேர் கருத்து தெரிவிக்க விருப்பமில்லை என்று சொல்லியுள்ளனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிப்பட்ட செயல்திறன் குறித்த கேள்விக்கு, 22% பேர் 'மிகவும் திருப்தி' என்றும், 22% பேர் திருப்தியில்லை என்றும், 33% பேர் 'ஓரளவு திருப்தி' என்றும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் 23% பேர் தங்களால் இதில் முடிவெடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்திறன் குறித்தும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில், 8 சதவீதம் பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமியின் செயல்திறன் திருப்திகரமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். 27% பேர் - ஓரளவு திருப்தி, 32% பேர் - திருப்தியில்லை என்றும் தெரிவித்துள்ள நிலையில் 33% பேர் கருத்து தெரிவிக்க விருப்பமில்லை என்று சொல்லியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் முக்கிய பிரச்னை என்ன?
தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான பாதிப்புகள் குறித்து கேட்டபோது, பெண்களின் பாதுகாப்புதான் முதலிடத்தில் உள்ளது.
15% பேர் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை சுட்டிக்காட்டியுள்ளனர். 12% பேர் விலைவாசி உயர்வையும், 10% பேர் போதைப்பொருள் மற்றும் மது பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், 8% பேர் வேலைவாய்ப்பின்மை பிரச்னையையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடுத்து, அவரவர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர்களில், 16% பேர் மட்டுமே தங்கள் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாடு மிகவும் திருப்தியளிப்பதாகக் கூறியுள்ளனர்.
அதேநேரத்தில், 32% பேர் ஓரளவிற்கு திருப்தி அடைவதாகவும், 25% பேர் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். தங்கள் தொகுதி எம்எல்ஏக்களின் செயல்பாடு பற்றிய கேள்விக்கு 27% பேர் தங்கள் முடிவைத் தெரிவிக்கவில்லை.
கடந்த பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
அதிமுகவில் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல், இபிஎஸ்- செங்கோட்டையன் இடையே கருத்து மோதல் உள்ளிட்டவை அக்கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தொடர்ந்து, அடுத்த தலைவராக விஜய் உருவெடுப்பார் என்பதும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் அறியப்படுகிறது.
ஏற்கெனவே, வெள்ளிக்கிழமை(மார்ச் 28) தமிழக வெற்றிக் கழகம் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் அடுத்த தேர்தலில் போட்டி என்று கூறியிருந்தார். மேலும், தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு 100% உறுதி செய்யப்படும் என்றும் தான் உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பிலும் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னையாக பெண்களின் பாதுகாப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
2026-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எப்படி அமையப்போகிறது? எந்த கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெறும்? எந்த கூட்டணி ஆட்சியமைக்கும்? யார் முதல்வராவார்? என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிக்க | செங்கோட்டையன் திடீர் தில்லி பயணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.