தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

DIN

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிா் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இன்று பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளார். இன்று பகல் 12 மணிக்கு, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குமாறு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கானது அரிதான வழக்கு, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டிருப்பதால் குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டிருப்பதாக சிபிஐ தரப்பு வழக்குரைஞர் சுரேந்திர மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கில் வழங்கப்படும் தண்டனை பாடமாக இருக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வாதம் முன் வைத்திருப்பதோடு, கூட்டு வன்கொடுமையும், ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிகபட்சமாக சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும். குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டுகால சிறைத் தண்டனையாக இருக்கும் என்று கூறினார்.

தண்டனை விவரங்கள் பகல் 12 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர்கள், குற்றவாளிகள் அனைவரும் இளம் வயதினர், திருமணமாகாதவர்கள், வயதான பெற்றோர் இருக்கிறார்கள் என்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

ஆனால், இதுபோன்ற மிக மோசமான குற்ற வழக்குகளில், இந்தப் பின்னணிகளைப் பார்க்கக் கூடாது என்று சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட விடியோக்கள் வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு பொள்ளாச்சி கிழக்கு போலீஸாரால் விசாரிக்கப்பட்டு பின்னா், சிபிசிஐடிக்கும் அதன்பின் சிபிஐக்கும் மாற்றப்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமாா் ஆகிய 9 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா்கள் மீது கோவை மகளிா் நீதிமன்றத்தில் கடந்த 2019 மே 21-ஆம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பின்னா், நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ஆம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. இதில், அறைக்கதவுகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் காணொலி வாயிலாக ஆஜா்படுத்தப்பட்டு வந்தனா்.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிா்தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, வழக்கின் தீா்ப்பு மே 13-ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி நந்தினிதேவி அறிவித்தாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அனைவரையும் மகளிா் நீதிமன்றத்தில் போலீஸாா் இன்று காலை ஆஜர்படுத்தியிருந்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீா்ப்பையொட்டி கோவை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

எந்தன் நெஞ்சில் நீங்காத... பாவனா!

உன்னோடு நானும்... ஜெனிலியா!

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

SCROLL FOR NEXT