முகப்பு
தமிழ்நாடு

ராணிப்பேட்டை: மின்சாரம் பாய்ந்து கணவர் பலி; குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி!

ராணிப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கணவர் பலியான நிலையில் குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Updated On : 17 மே, 2025 at 5:26 AM
பலியான முருகன்
பகிர்:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் மனைவி இரு குழந்தைகளோடு சேர்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த மருதாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், (38) விவசாயம் செய்து வந்தார். நேற்று நள்ளிரவு 1 மணியளவில், பலத்த காற்றுடன் பெய்த மழையில் வீட்டிற்கு வெளியே கீழே அறுந்து விழுந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் கூறாய்வுக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த நிலையில், கணவர் இறந்த துக்கம் தாளாமல் அவரது மனைவி திவ்யா, தனது மகன் திராவிட், மகள் மித்ரா ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் திவ்யா மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரது இரு குழந்தைகளுக்கும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முழு கட்டுரையைப் படிக்க →