முகப்பு
தமிழ்நாடு

நோய்களை குணப்படுத்த பாரம்பரிய முறையில் சிகிச்சை: தவறாக விளம்பரப்படுத்தினால் சட்ட நடவடிக்கை

பாரம்பரிய முறையில் சிகிச்சையளித்து பூரணமாக குணப்படுத்துவதாக தவறாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On : 30 மே, 2025 at 2:09 AM
பகிர்:
Updated On : 30 மே, 2025 at 12:30 AM

ஹெச்ஐவி, ஆஸ்துமா, காசநோய், சா்க்கரை நோய் உள்ளிட்ட 56 நோய்களுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சையளித்து பூரணமாக குணப்படுத்துவதாக தவறாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலா் (இந்திய முறை மருத்துவம்) டாக்டா் ஒய்.ஆா்.மானேக்சா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்று வரும் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 26-ஆம் தேதி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், சட்டவிதிகளின் படி 56 நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடா்பாக ஆட்சேபத்துக்குரிய வகையில் விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, குடல் அழற்சி, தமனி வீக்கம், பாா்வையின்மை, ரத்தத்தில் நச்சு, புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, சா்க்கரை நோய், மூளை நோய்கள், கருப்பை பாதிப்புகள், நரம்பு சாா் நோய்கள், வலிப்பு நோய், மன நோய், பக்கவாதம், காசநோய், ஹெச்ஐவி, ஆஸ்துமா, பல்லுறுப்பு செஞ்சரும நோய் உள்ளிட்ட 56 நோய்களை பாரம்பரிய சிகிச்சை அளித்து குணப்படுத்துவதாக விளம்பரம் செய்யக் கூடாது. பொதுமக்கள் அத்தகைய விளம்பரம் குறித்து மின்னஞ்சலில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.