எங்களை நேரில் சந்திக்கும் தைரியம்கூட இபிஎஸ்ஸுக்கு கிடையாது என்றும் இந்த தேர்தலில் பழனிசாமியின் துரோகம் வீழ்த்தப்படும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் வந்தார்.
அப்போது செய்தியாளர்களுடன் பேசிய டிடிவி தினகரன்,
செங்கோட்டையன் 1972ல் புரட்சித் தலைவர் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். கட்சியில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அதிமுகவின் மூத்த நிர்வாகி. பசும்பொன்னில் நாங்கள் சந்தித்தது அரசியல் ரீதியான நிகழ்ச்சி இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் புரட்சித் தலைலி ஜெயலலிதா பசும்பொன் வரும்போதெல்லாம் செங்கோட்டையன், அவரின் பாதுகாப்பிற்காக கட்சி சார்பாக அங்கு வருவார்.
ஜெயலலிதாவின் அரசியல் சுற்றுப்பயணத்தின் பாதுகாப்பில் செங்கோட்டையன் முக்கியப் பங்கு ஆற்றியவர். நாங்கள் மூவரும் சந்தித்ததை அரசியல் நிகழ்வாக பார்க்கவில்லை. துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம் என்றுதான் செங்கோட்டையன் சொன்னார்.
கங்காரு, குட்டியை மடியில் கட்டிப்பிடித்து இருப்பதுபோல எடப்பாடி பழனிசாமி பதவியை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார். குரங்கு கையில் சிக்கிய பூமாலைபோல தற்போது கட்சியை சின்னாபின்னமாக்கி வருகிறார்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர எடப்பாடி பழனிசாமி வழி வகுக்கிறார். மற்றவர்களைப் பார்த்து துரோகி என கூறும் தகுதிகூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.
கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொரிந்துகொண்டதுபோல செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
எங்களை நேரில் சந்திக்கும் தைரியம்கூட எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய பழனிசாமி துரோகியா?அவர் முதல்வராக அவருக்கு ஆதரவு வழங்கிய 18 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி துரோகியா? அல்லது நாங்கள் துரோகியா
ஹிட்லர் போன்ற மனப்பான்மையில் உள்ள பழனிசாமிக்கு துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.
சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு எங்களோடு வந்ததால் கட்சியிலிருந்து செங்கோட்டையனை நீக்கிய துரோகத்தின் உருவம் பழனிசாமிக்கு தென் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் தேர்தலில் பதில் அளிப்பார்கள்.
தென் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார். எங்களை 'பி டீம்' என்று சொல்லும் பழனிசாமிதான் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமானவர். இந்த தேர்தலில் பழனிசாமியின் துரோகம் வீழ்த்தப்படும்.
கொடைநாடு கொலை வழக்கை பற்றி பேசினாலே பழனிசாமி பதறுவார். பதறுகிறார். அரக்கர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது அழிவை சந்திப்பார்கள், கடைசியில் சூரசம்ஹாரம் நடக்கும்.
எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்கு நாங்கள் ஜனநாயக முறையில் எடுக்கப் போகும் ஆயுதத்தை பொருத்திருந்து பாருங்கள்.
எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்கு ஆயுதமாக (விஜய்யை) கையில் எடுப்பீர்களா என்ற கேள்விக்கு? போர்க்களத்தில்தான் ஆயுதத்தை எடுக்க முடியும், அந்த ஆயுதத்தை 3 மாதம் பொறுத்திருந்து தேர்தலில் பாருங்கள்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.