வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்? என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் அவர் பேசுகையில், நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை, ஆனால் அதற்காக உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும், பதற்றமில்லாத சூழலில் அதை செய்ய வேண்டும்" தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முழுமையான திருத்த பணிகள் செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம். மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பிகாரில் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றன.
அது போல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக கடமையாற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. மக்களின் உரிமைகளைக் காக்க ஜனநாயக குரலைக் காக்க வரைவு தீர்மானத்தை முன்வைத்துள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்பட 20 கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. பிகாரைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், நாளை மறுநாள் (நவ. 4) முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது என்றும், கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும் எனவும், நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என்றும், ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்ய தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.