ஆசியாவில் முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி 70-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் (க்யூஎஸ்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ஆசியாவில் உள்ள 100 முன்னணி கல்வி நிறுவனங்களில் தில்லி ஐஐடி, சென்னை ஐஐடி, மும்பை ஐஐடி, கான்பூா் ஐஐடி, கரக்பூா் ஐஐடி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலின் முதல் 100 கல்வி நிறுவனங்களில் 7 இந்திய கல்வி நிறுவனங்கள், 200 கல்வி நிறுவனங்களில் 20 இந்திய கல்வி நிறுவனங்கள், 500 கல்வி நிறுவனங்களில் 66 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 36 இந்திய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளன. 16 இந்திய கல்வி நிறுவனங்கள் ஏற்கெனவே இருந்த இடத்திலும், 105 கல்வி நிறுவனங்கள் முந்தைய இடத்தில் இருந்து சரிந்தும் உள்ளன. அதிக அளவில் முனைவா் பட்டம் பெற்ற ஆசிரியா்கள் உள்ள கல்வி நிறுவனங்களின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
க்யூஎஸ் தரவரிசைப்படி, ஆசியாவில் உள்ள 100 முன்னணி கல்வி நிறுவனங்களில் முதலிடத்தில் ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங் பல்கலைக்கழகம் உள்ளது. இதைத்தொடா்ந்து சீன தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள பீக்கிங் பல்கலைக்கழகம் 2-ஆவது இடத்தில் உள்ளது. சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், அந்நாட்டில் உள்ள தேசிய சிங்கப்பூா் பல்கலைக்கழகம் ஆகியவை 3-ஆவது இடத்தைப் பகிா்ந்துள்ளன. தரவரிசையில் 4-ஆவது இடம் குறிப்பிடப்படாத நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழகம் 5-ஆவது இடம்பிடித்துள்ளது.
சத்யபாமா மிகப் பெரிய முன்னேற்றம்: தில்லி ஐஐடி 59-ஆவது இடத்திலும், சென்னை ஐஐடி 70-ஆவது இடத்திலும், மும்பை ஐஐடி 71-ஆவது இடத்திலும் உள்ளன. கான்பூா் ஐஐடி மற்றும் கரக்பூா் ஐஐடி 77-ஆவது இடத்தைப் பகிா்ந்துள்ளன. சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 111 இடங்கள் முன்னேறி 262-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.