வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (நவ. 4) தொடங்கியது. வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பிரத்யேக படிவங்களை வழங்கினர்.
தமிழகத்தில் கடைசியாக தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இப்போது தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிக்காக தேர்தல் ஆணையத்தால் பிரத்யேக கணக்கீட்டுப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் வாக்காளரின் பெயர், புகைப்பட அடையாள அட்டை எண், முகவரி, வாக்காளர் பட்டியல் வரிசை எண், பாகம் எண் மற்றும் வாக்குச்சாவடி பெயர், வாக்குச்சாவடி அமைவிடம், பேரவைத் தொகுதியின் பெயர், வாக்காளரின் புகைப்படம் ஆகியன அச்சிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு வாக்காளருக்கும் இந்தப் படிவத்தின் இரு பிரதிகள் வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி அலுவலர்களால் வழங்கப்படும்.
கணக்கீட்டுப் படிவத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள், தங்களது பிறந்த தேதி, ஆதார் எண், கைப்பேசி எண், தந்தை, தாய் அல்லது கணவர் பெயர், அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். மேலும், முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் அதன் விவரங்களையும் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
இரு படிவங்களையும் பூர்த்தி செய்து, அதில் ஒன்றை வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொரு பிரதியில், அவரிடம் ஒப்புகை பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். படிவம் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், படிவத்தில் குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலரின் கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியையொட்டி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கடந்த 3 நாள்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், கணக்கீட்டு படிவத்தை வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் வழங்கும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
டிச. 4 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர் இப்பணியை மேற்கொள்வர். படிவங்களைச் சேகரிக்கும் பணிகள் முடிந்த பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 9-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதன் பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள டிச. 9 முதல் ஜன. 1 வரை அவகாசம் உள்ளது.
தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு பிப். 7-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
68,472 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்: தமிழகம் முழுவதும் 38 மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் 234 வாக்காளர் பதிவு அலுவலர்களின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இதில், கணக்கீட்டுப் படிவத்தை வீடு வீடாகச் சென்று வழங்கி, பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 68,472 பேர் ஈடுபடுகின்றனர். மேலும், 7,234 அலுவலர்கள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆய்வு
தமிழகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் புதன்கிழமை (நவ. 5) ஆய்வு செய்யவுள்ளனர்.
இதற்காக, இந்திய தேர்தல் ஆணைய துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு மற்றும் இயக்குநர் கே.கே. திவாரி ஆகியோர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான ஜெ.குமரகுருபரன் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, வீடுதோறும் கணக்கீட்டுப் படிவம் விநியோகிக்கும் பணிகள் டிச. 4 வரை நடைபெறும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கணக்கீட்டுப் படிவங்களை விநியோகித்து, பூர்த்தி செய்த படிவங்களைச் சேகரிப்பர். மேலும், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றனர்.
இந்த தருணத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு மற்றும் இயக்குநர் கே.கே. திவாரி, ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து, மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, குறிப்பாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் தொடங்கப்பட்டது குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக துணைத் தேர்தல் ஆணையர் மற்றும் இயக்குநர் ஆகியோர் மாவட்டங்களில் புதன்கிழமை கள ஆய்வு செய்ய உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.