முதியோர்களுக்கான அன்புச் சோலை திட்டத்தை திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(நவ. 10) தொடக்கி வைத்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளி, பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக “அன்புச் சோலை” மையங்கள் ஒரு மாநகராட்சியில் இரண்டு வீதம் 10 மாநகராட்சிகளில் 20 மையங்கள், சென்னை பெருநகராட்சியில் 3 மையங்கள் மற்றும் தொழில் மாவட்டங்களான ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் 2 மையங்கள் என மொத்தம் 25 “அன்புச் சோலை” மையங்களை தொடங்கி வைத்தார்.
அன்புச் சோலை திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மூத்த குடிமக்களுடன் கேரம் விளையாட்டை விளையாடி மகிழ்ந்தார்.
அன்புச் சோலை திட்டத்தின் சிறப்பம்சங்கள்
இங்கு பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் தேவையான திறன் மேம்பாடு சேவைகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும்.
பகல் நேரங்களில் மட்டும் செயல்படும் இந்த மையங்களில், முதியவர்கள் தோழமை மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். முதியோா் எளிதில் சென்றும் வகையில் போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அன்புச் சோலை மையங்களுக்கு வரும் முதியவர்களுக்கு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த பராமரிப்பாளா்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளா்கள் பணியமா்த்தப்பட்டு முதியோரின் விரிவான பராமரிப்பு உறுதி செய்யப்படும்.
அன்புச் சோலை மூலமாக, முதியோர் குடும்பப் பிணைப்பைத் தொடா்ந்தே, பாதுகாப்பான சூழலில், அர்த்தமுள்ளதாக பகல் நேரங்களைக் கழிக்க முடியும்.
இதையும் படிக்க: செயல்படாத பழைய வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்க வேண்டுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.