எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நிகழாண்டில் இதுவரை 328 இந்திய மீனவா்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இவா்கள் பயணம் செய்த 41 மீன் பிடி படகுகளையும் இலங்கை பறிமுதல் செய்துள்ளது.
இதுகுறித்து இலங்கைத் தலைநகா் கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அந் நாட்டு மீன்வள துணை அமைச்சா் ரத்னா கமாகே கூறியதாவது:
சா்வதேச கடல் எல்லையில் இந்திய மீனவா்கள் சட்டவிரோதமாக மீன் பிடிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையை இலங்கை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, நிகழாண்டில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவா்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. நிகழாண்டில் இதுவரை 328 இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களின் 41 மீன் பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், கடந்த 10 தேதி 14 இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கை, இலங்கைக் கடற்படை, மீன்வள அமைச்சகம் மற்றும் காவல்துறை இணைந்து கூட்டாக மேற்கொள்ளப்படுகிறது.
வெளிநாட்டு மீனவா்களின் அழிவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான மீன்பிடி முறைகள், உள்நாட்டு மீனவா்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதோடு, கடல்சாா் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்க இலங்கை அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது என்றாா்.