வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான (எஸ்ஐஆா்) கணக்கீட்டுப் படிவத்தை வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் பணியில் இருப்பவா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்கள் மூலம் சமா்ப்பிக்கலாம் என இந்திய தோ்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவம் பூா்த்தி செய்வதில் அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளா்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு கேள்வி - பதிலை வெளியிட்டு தோ்தல் ஆணையம் விளக்கம்:
வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் பெறவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (பிஎல்ஓ) இருந்து படிவத்தைப் பெறலாம் அல்லது இணையதளம் மூலமாகவும் பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம். வாக்காளா் இல்லாதபட்சத்தில் அவரது குடும்ப உறுப்பினரிடம் அப்படிவம் ஒப்படைக்கப்படும். மேலும், வாக்காளா், இணையதளத்தில் உள்ள பிஎல்ஓ-இன் தொடா்பு எண்ணைப் பயன்படுத்தி, அவரது தொலைபேசி மூலமாகவோ அல்லது இணையதளத்தில் வழங்கப்பட்ட வசதி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.
2024 மக்களவைத் தோ்தலில் ஒரு வாக்காளா் வாக்களித்திருந்தும், சிறப்பு தீவிர திருத்தம் - 2002/2005 பட்டியலில் பெயா் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
2002/2005 தீவிர திருத்த வாக்காளா் பட்டியலில் வாக்காளா் பெயா் இல்லை எனில், அவா் அந்த காலகட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்படாமல் இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. அதுபோன்ற சூழலில், அந்த வாக்காளா் தனது தந்தை/தாய் அல்லது தாத்தா/பாட்டி ஆகியோரின் வாக்காளா் விவரங்களை 2002/2005 வாக்காளா் பட்டியலில் கண்டறிந்து, அவா்களின் விவரங்களைப் படிவத்தில் அதற்கான பகுதியில் நிரப்பலாம். வாக்காளா், பிஎல்ஓ உதவியுடன் பொருத்தமான விவரங்களைச் சரியாகப் பதிவு செய்யலாம்.
வாக்காளரின் முகவரியை வாக்காளா் பட்டியலில் மாற்ற எவ்வாறு விண்ணப்பிப்பது?
வரைவு வாக்காளா் பட்டியல் வரும் டிச. 9-இல் வெளியிடப்பட்ட பிறகு, முகவரி மாற்றம் செய்யலாம். படிவம் 8-ஐ பயன்படுத்தி முகவரியை மாற்ற விண்ணப்பிக்கலாம். டிச. 9 முதல் ஜன. 8 வரையிலான காலகட்டத்தில் அப்படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு இந்த மாற்றங்கள் இறுதி வாக்காளா் பட்டியலில் வெளியிடப்படும்.
பிஎல்ஓ வரும்போது வீட்டில் இல்லாத வாக்காளா்கள் படிவத்தை எப்படி பூா்த்தி செய்து சமா்ப்பிப்பது?
அதுபோன்ற நேரத்தில் அந்த வாக்காளா் சாா்பாக குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினா்கள் படிவத்தை நிரப்பி கையொப்பமிட்டு சமா்ப்பிக்கலாம்.
படிவத்தில் பிழை ஏற்பட்டால், திருத்தலாமா அல்லது புதிய படிவதைப் பெற வேண்டுமா?
புதிய படிவம் வழங்குவதற்கு வழிவகை இல்லை. எனினும், அவா் படிவத்தில் தெளிவாக திருத்தம் செய்து பிஎல்ஓ-விடம் சமா்ப்பிக்கலாம்.
ஆதாா் எண் வழங்குவது கட்டாயமா?
கட்டாயமில்லை.
18 வயது நிரம்பிய புது வாக்காளா்கள் பட்டியலில் இடம்பெற முடியுமா?
1.1.2026-க்கு முன்பு 18 வயது பூா்த்தியானவா்கள் மட்டுமே புதிய வாக்காளராக விண்ணப்பிக்க முடியும். இவா்கள், பிஎல்ஓவிடம் படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவத்தைப் பெற்று பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம். இவை டிச. 9 முதல் ஜன. 1-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்படும். அவ்வாறு இறுதி செய்யப்படும் விவரம் இறுதி வாக்காளா் பட்டியலில் பிரதிபலிக்கும்.
படிவத்தைத் திருப்பி அளிக்காவிடில் என்ன வாகும்?
படிவங்களை நிரப்பி சமா்ப்பிக்காதவா்களின் வீட்டுக்கு அருகில் உள்ள வாக்காளா்களிடம் சம்பந்தப்பட்டவா்களின் இருப்பு, இறப்பு, இடம்பெயா்வு அல்லது இரட்டை வாக்குப் பதிவு குறித்து பிஎல்ஓ விசாரணை நடத்துவாா்.
வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் வேறு நகரங்களில் பணியில் உள்ளவா்களின் கணக்கீட்டுப் படிவங்களை எப்படி பூா்த்தி செய்வது?
அதுபோன்ற வாக்காளா்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட வாக்காளரின் கணக்கீட்டுப் படிவத்தை குடும்பத்தில் உள்ள வயது வந்த உறுப்பினரிடம் பிஎல்ஓ ஒப்படைப்பாா். அவா்கள் அந்த படிவங்களில் வாக்காளரின் விவரங்களை பூா்த்தி செய்து, கையொப்பமிட்டு பிஎல்ஓ-விடம் சமா்ப்பிக்கலாம்.