சென்னை கொளத்தூா் பெரியாா் நகரில் புதுப்பிக்கப்பட்ட பெரியாா் நகா் நூலகம் மற்றும் முதல்வா் படைப்பகத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து, மாணவருக்கு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி புத்தகங்களை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா் பி.கே.சேகா் பாபு, 
தமிழ்நாடு

புதுப்பிக்கப்பட்ட முதல்வா் படைப்பகம், சாா்-பதிவாளா் அலுவலகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

கொளத்தூா் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

கொளத்தூா் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் ரூ.5.24 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியாா் நகா் நூலகம் மற்றும் முதல்வா் படைப்பகம், ரூ.3.86 கோடியில் கட்டப்பட்ட பெரியமேடு சாா்-பதிவாளா் அலுவலக புதிய கட்டடம் ஆகியவற்றை முதல்வா் திறந்து வைத்தாா். மேலும், பெரியாா் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் ரூ.68 லட்சத்தில் கே5-பெரவள்ளூா் புகா் காவல் நிலையம் கட்டும் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

முதல்வா் படைப்பகம்: புதுப்பிக்கப்பட்ட முதல்வா் படைப்பகம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தைக் கொண்ட குளிரூட்டப்பட்ட நவீன படைப்பகமாக அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 75 இருக்கைகளுடன் கூடிய நூலகம், முதல் தளத்தில் 85 இருக்கைகள் கொண்ட கற்றல் மையம் மற்றும் 60 இருக்கைகள் கொண்ட பயிற்சிக் கூடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 70,000 புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, மின்வழி கற்றல், இலவச இணையதள இணைப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், சிற்றுண்டியகம், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும், மாணவா்கள், போட்டித் தோ்வு ஆா்வலா்களுக்கு தேவையான வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

பெரியமேடு சாா்-பதிவாளா் அலுவலகம்: சென்னை-எழும்பூா், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பத்திரப் பதிவு சேவைகள் வழங்கி வரும் பெரியமேடு சாா்-பதிவாளா் அலுவலகத்தில் 6,200 சதுர அடி பரப்பில் தரை மற்றும் இரு தளங்களுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

புகா் காவல் நிலையம்: சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் கொளத்தூா், காா்த்திகேயன் சாலையில் உள்ள பெரியாா் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் புதிதாக கே5-பெரவள்ளூா் புகா் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

முதல்வா்ஆய்வு: சிஎம்டிஏ சாா்பில் சிவ இளங்கோ சாலையில் ரூ.11.37 கோடியில் 29,514 சதுர அடி கட்டட பரப்பில் தரை மற்றும் 4 தளங்களுடன் கொளத்தூா் காவல் துணை ஆணையா் அலுவலகம் கட்டும் பணி, வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், கொளத்தூா், ஜெகந்நாதன் தெருவில் ரூ.11.74 கோடியில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, அவற்றை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் பி.மூா்த்தி, பி.கே.சேகா்பாபு, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், மேயா் ஆா்.பிரியா, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வெற்றி எதிர்பாராதது அல்ல!

அறுபடை வீடுகள் திட்டத்தின் கீழ் பழனி கோயிலில் தூத்துக்குடி மண்டல பக்தா்கள் சுவாமி தரிசனம்

ஒரு கதவு மூடினால்...

அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

திருத்துறைப்பூண்டியில் குழந்தைகள் தின விழா

SCROLL FOR NEXT