கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்ஸுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு சனிக்கிழமை முதல் நேரடியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் 7-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக சென்று கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள விவிஜிஆர் நகர் மற்றும் சிவலிங்க ஆசாரியார் தெருவில் வசிக்கும் நெரிசலில் சிக்கி காயமடைந்த உஷா மற்றும் அவரது தாய் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.