தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள், நவ. 30-க்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக வேளாண்மை-உழவா்நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் இதுவரை 26.25 லட்சம் ஏக்கரில் சம்பா நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், இதுவரை 6.27 லட்சம் விவசாயிகளால் 15 லட்சம் ஏக்கா் நெற்பயிா் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 57 சதவீதம். இதே நாளில் கடந்த ஆண்டு 10 லட்சம் ஏக்கா் சம்பா நெற்பயிா் காப்பீடு செய்யப்பட்டது.
27 மாவட்டங்கள்: தஞ்சாவூா், நாகை, மயிலாடுதுறை, திருவாரூா், மதுரை, புதுக்கோட்டை, கரூா், சேலம், திருப்பூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், சிவகங்கை, கடலூா், திருவள்ளூா், ஈரோடு உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவ.5 என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அவகாசம் நீட்டிப்பு: இந்நிலையில், தொடா் மழையால் குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா நெல் நடவுப் பணிகள் தாமதமானது. மேலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஈடுபட்டுள்ளதால் அடங்கல் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிா் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவ. 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. வேளாண்துறை அலுவலா்கள் தங்கள் பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி, பயிா்க் காப்பீடு செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
இதேபோல, தஞ்சாவூா், நாகை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவ. 30-க்குள் பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.