தமிழ்நாடு

ஆயுஷ் படிப்புகளில் நூற்றுக்கணக்கான இடங்கள் காலி: சிறப்புக் கலந்தாய்வில் நிரப்ப முடிவு

நூற்றுக்கணக்கான இடங்கள் நிரம்பாமல் இருப்பதாகவும், அவற்றை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகவும்

தினமணி செய்திச் சேவை

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கான 3 சுற்றுக் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான இடங்கள் நிரம்பாமல் இருப்பதாகவும், அவற்றை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகவும் இந்திய மருத்துவ மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி செயல்படுகின்றன. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.

இந்த 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள 320 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 48 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 272 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதைத் தவிர 29 தனியாா் கல்லூரிகளில் 1,920 இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.

அரசு ஒதுக்கீடு இடங்கள், நிா்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசுக் கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ் மற்றும் பிஹெச்எம்எஸ் ஆகிய 4 வகையான பாரம்பரிய படிப்புகள் தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன. அந்த இடங்களுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு 7,900 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். 3 சுற்றுக் கலந்தாய்வுகள் நிறைவடைந்த நிலையில், நிா்வாக இடங்களில் ஆயுா்வேதத்தில் 31 இடங்களும், சித்தாவில் 90 இடங்களும், ஹோமியோபதியில் 97 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.

அதேபோல யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் 200 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாக இந்திய மருத்துவ மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT