கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் இருக்கின்றன, அதை இப்போது சொல்ல முடியாது என்று மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ, மல்லை சத்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சித் தலைமை மற்றும் துரை வைகோ குறித்து விமர்சித்து வந்த மல்லை சத்யா, தனித்துச் செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி அவரை மதிமுகவிலிருந்து இடைநீக்கம் செய்து வைகோ நடவடிக்கை எடுத்தார். மேலும், 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மல்லை சத்யா தனது விளக்கத்தையும் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, மல்லை சத்யாவை கட்சியிருந்து நிரந்தரமாக நீக்குவதாக வைகோ அறிவித்தார்.
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, சென்னை அடையாறில், வரும் 20ம் தேதி புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மல்லை சத்யா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில், ”கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் இருக்கின்றன, அதை இப்போது சொல்ல முடியாது.
திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.
நவம்பா் 20 ஆம் தேதி சென்னையில் புதிய கட்சி தொடங்கப்பட இருக்கிறது. கட்சியின் பெயரை முடிவு செய்ய புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
15 பேர் கொண்ட குழுவினருக்கு மட்டுமே புதிய அரசியல் இயக்கத்தின் பெயர் தெரியும். துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, அதனால் பாஜகவுடன் இணைந்து செயல்பட நினைக்கிறார்
ராமதாஸ், அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுவதுபோல், ஒரு நாள் வைகோவும் வருத்தப்படுவார்” என்றார்.
திமுகவிலும் வாரிசு அரசியல் உள்ளதே என்ற கேள்விக்கு, ”திமுகவில் அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு இருக்கிறது, ஆனால் துரை வைகோவிடம் அவை இல்லை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.