கோவை கொடிசியா வளாகத்தில் புதன்கிழமை (நவ.19) முதல் 3 நாள்கள் நடைபெறும் வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கும் இந்த மாநாட்டில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருள்களை விநியோகிப்போர், விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இந்த மாநாட்டில் நாட்டின் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு (பி.எம்.கிஸான்) திட்டத்தின்கீழ் 21-ஆவது தவணையை பிரதமர் விடுவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீடித்த சுற்றுச்சூழலுக்கேற்ற மற்றும் ரசாயனம் இல்லாத நடைமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்கப்படுத்துவதையும், இந்தியாவின் வேளாண் எதிர்காலத்துக்காக சாத்தியமிக்க மற்றும் பருவநிலைக்கு உகந்த பொருளாதார அளவில் நீடித்த மாதிரியாக இயற்கை மற்றும் மீள் உருவாக்கம் செய்யப்படும் வேளாண்மையைத் துரிதப்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் ஊரக தொழில்முனைவோர் இடையே சந்தை இணைப்புகளை உருவாக்குதல், இயற்கை வேளாண் முறைகள், வேளாண் பதப்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பேக்கேஜிங், உள்நாட்டுத் தொழில்நுட்பங்களில் புதுமை கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துதல் ஆகியவற்றின் மீது இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படும். இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பினர் செய்துள்ளனர்.
பிரதமர் பயணத் திட்டம்: ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியிலிருந்து புதன்கிழமை (நவ.19) நண்பகல் 12.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி கோவை விமான நிலையத்துக்கு பிற்பகல் 1.25 மணிக்கு வந்தடைய உள்ளார். அங்கிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு கார் மூலம் கொடிசியா அரங்குக்குச் செல்கிறார்.
விழா முடிந்ததும் பிற்பகல் 3.15 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு திரும்பும் பிரதமர், 3.30 மணிக்கு விமானம் மூலம் புது தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
போலீஸ் பாதுகாப்பு: பிரதமர் வருகையையொட்டி, 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரின் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்ட நிலையில், தொடர்ந்து உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாத கார்களை போக்குவரத்து போலீஸார் மீட்பு வாகனம் மூலம் ஏற்றிச் சென்றனர்.
ஏடிஜிபி ஆலோசனை: பிரதமர் மோடி வருகை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
எடப்பாடி பழனிசாமி சந்திப்பு?: பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, கூட்டணி விவகாரம் குறித்தும், தமிழகத்தில் தேர்தல் வெற்றி குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.