புதுக்கோட்டை: ஏழை, எளியோரின் உரிமை சார்ந்த மக்கள் போராட்டங்களை நடத்த ஒருபோதும் தயங்கியதில்லை; அதேநேரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் தமிழக முதல்வருடன் நிற்கிறோம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
பழைய ஓய்வூதியத் திட்டம் கோரும் அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டத்தை ஆதரிக்கிறோம். போதிய காலஅவகாசமின்றி அவசரமாக மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் பணிக்கு எதிராக போராடும் வருவாய்த் துறை ஊழியர் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.
இதுபோன்ற உழைப்பாளர் நலன் சார்ந்த ஏழை, எளிய மக்களின் நலன் சார்ந்த, உரிமை சார்ந்த போராட்டங்களை நடத்துவதில் தயங்கியதே இல்லை. அதைச் செய்யாவிட்டால் நாங்கள் நாங்களல்ல. எதனையும் கடந்து ஒதுங்கிப் போய்விடுவதில்லை.
அதேநேரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தமிழக முதல்வரின் பக்கம் நிற்கிறோம்.
இந்த வேறுபாட்டை முதல்வர் நன்றாக உணர்ந்திருக்கிறார்.
அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கேற்ப வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்போம். இதனையும் முதல்வர் புரிந்து கொள்வார்.
போதைப் பொருள்கள் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற கருத்தியல் அடிப்படையில் மதிமுக பொதுச்செயலர் வைகோவின் நடைப்பயண இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.
அதற்கான கலாசாரப் போரை கல்வியின் மூலமாக எல்லோரும் சேர்ந்து நடத்திட வேண்டும்.
மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவை மட்டுமல்ல, அவர்களோடு சேர்ந்து வரும் கட்சிகளையும் உறுதியாகத் தோற்கடிப்போம். தமிழக மண் சமூக நல்லிணக்கத்தை ஆதரிக்கும் மண்.
விஜய் போன்றோர் கூட்ட எண்ணிக்கையில் பலமிருப்பதைப் போலக் காட்டலாம். தேர்தலின் போது மக்கள் கொள்கைகளைப் பார்த்துதான் வாக்களிப்பார்கள் என்றார் வீரபாண்டியன்.
இதையும் படிக்க: தோல்விக்கு 100% பொறுப்பேற்கிறேன்! பிரசாந்த் கிஷோர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.