கோவை கொடிசியா வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், வாழை அ.ப.கருப்பையா. உடன், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.  
தமிழ்நாடு

இயற்கை விவசாயத்தின் மகுடம் தமிழகம்: பிரதமர் மோடி

"இயற்கை விவசாயம் நமது பாரம்பரியத்தில் பிறந்தது; அதன் தலைமை இடம் என்றால் அது தமிழகம்' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தினமணி செய்திச் சேவை

"இயற்கை விவசாயம் நமது பாரம்பரியத்தில் பிறந்தது; அதன் தலைமை இடம் என்றால் அது தமிழகம்' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை உழவர், ஆர்வலர் கூட்டுக் குழுவின் சார்பில் புதன்கிழமை (நவ. 19) முதல் 3 நாள்கள் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

பி.எம். கிஸான் நிதி விடுவிப்பு: நிகழ்ச்சியில், பி.எம். கிஸான் திட்டத்தின் கீழ் 21-ஆவது தவணையாக 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி உதவித் தொகையை பிரதமர் மோடி விடுவித்தார்.

இயற்கை வேளாண்மை இந்தியாவின் இதயத்துக்கு நெருக்கமானது. பொறியியலில் பட்டம் பெற்றவர்களும், இஸ்ரோவில் பணியாற்றி வந்தவர்களும் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருப்பதையும், அவர்கள் மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்து வருவதையும் இங்கு கண்காட்சி அரங்கு அமைத்திருப்பவர்களிடம் உரையாடியதில் இருந்து அறிந்து வியக்கிறேன். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுடன் புத்தொழில் நிறுவனங்களும் ஒன்றாக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜிஎஸ்டி குறைப்பால் விவசாயிகளுக்குப் பலன்: இயற்கை விவசாயத்தின் உலகளாவிய மையமாக மாறும் பாதையில் இந்தியா முன்னேற்றமடைந்துள்ளது. இந்திய வேளாண் துறையில் கடந்த 11 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேளாண் கடன் அட்டைத் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் பொருள்களின் ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது. மேலும், உயிரி உரங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பால் விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைத்துள்ளது.

பி.எம். கிஸான் திட்டத்தின் கீழ் இதுவரை 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சுமார் ரூ.4 லட்சம் கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்துக்கு ஊக்குவிப்பு: இயற்கை விவசாயம் என்பது 21-ஆம் நூற்றாண்டின் தேவையாக உள்ளது. விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு அதிகமானதால் மண்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இடுபொருள்களுக்காக விவசாயிகள் அதிக அளவில் செலவிட நேரிடுகிறது. விவசாயிகளின் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விதமாகவும், ஒற்றைப் பயிர் முறைக்கு மாற்றாகவும் இயற்கை வேளாண்மை மட்டும் இருக்கிறது.

இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவிப்பதாலும், இயற்கை வேளாண்மை சார்ந்த தேசிய இயக்கத்தின் மூலமாகவும் பல லட்சம் பேர் இதில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 35,000 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை விவசாயம் என்பது இந்தியாவின் சொத்து, இது வேறு எங்கும் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்ல. இது நமது பாரம்பரியத்தில் பிறந்தது.

முருகனுக்கு தேனும் தினை மாவும்...: இயற்கை விவசாயத்தின் விளைபொருள்கள் யாவும் நமது உணவுப் பழக்கத்தில் ஒன்றுகலந்தவை. சிறுதானியங்களின் சாகுபடியை இயற்கை வேளாண்மையுடன் இணைப்பதால் பூமியைப் பாதுகாக்க முடியும். தேனும் தினை மாவும் முருகப்பெருமானுக்கு படைக்கப்படுகின்றன. அதுபோல, இந்த மண்ணுக்குரிய கம்பு, ராகி, சாமை போன்ற சிறுதானிய உணவுகள் உலக சந்தையைச் சென்று சேர வேண்டும்.

கர்நாடகம், கேரள மாநிலங்களின் மலைப் பகுதிகளில் விவசாயிகள் ஒரே தோட்டத்தில் பல்வேறு வகையான பயிர்களை நடவு செய்கின்றனர். இந்த விவசாய முறையை நாடு முழுவதற்கும் கொண்டுசெல்வது குறித்தும், வேளாண் பாடத்தில் இயற்கை விவசாயத்தை முக்கியப் பாடமாக சேர்ப்பது குறித்தும் வேளாண் விஞ்ஞானிகள் ஆராய வேண்டும்.

பழைமை வாய்ந்தது: இந்த தென்னிந்திய மாடல் விவசாயம் உலகின் பழைமையான ஒன்றாகும். மேலும், உலகின் பழைமையான அணைக்கட்டுகள் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலிங்கராயன் கால்வாய், நீர்ப்பாசனத் திட்டங்கள், கோயில் குளங்கள் யாவும் பிறருக்கு முன்மாதிரியாக உள்ளன. இயற்கை விவசாயத்துக்கு உலகின் தலைமை இடம் என்றால் அது இந்தப் பகுதிதான்.

விவசாயிகள் ஒரு ஏக்கர், ஒரு பருவம் என்பதில் இருந்து இயற்கை விவசாயத்தை நோக்கி வர வேண்டும். இதை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் மாநில அரசுகளின் பங்களிப்பு மகத்தானது. அதன் காரணமாக குறுகிய காலத்தில் பல ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாகியுள்ளன.

இந்த மாநாடு தேசத்தின் இயற்கை வேளாண்மைக்கு புதிய திசையைக் காட்டுவதாகவும், தீர்வைக் கொடுப்பதாகவும் அமையும் என்றார் பிரதமர்.

நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி., மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், கே.ராமசாமி, வாழை கருப்பையா, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பரிசளித்துப் பாராட்டினார்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் புட்டபர்த்தியில் இருந்து கோவை வந்த பிரதமர் மோடி, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புது தில்லி திரும்பினார்.

"பிகார் காற்று தமிழகத்தில் வீசுகிறது'

கோவை இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நான் விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் இடத்தை நோக்கி வந்தபோது, என்னை வரவேற்பதற்காக காத்திருந்த விவசாயிகள் தங்கள் கைகளில் வைத்திருந்த துண்டை சுழற்றியபடி எனக்கு வரவேற்பு அளித்தனர். அதைப் பார்த்ததும் பிகாரின் காற்று தற்போது இங்கேயும் வீசுகிறதோ என்று எண்ணத் தோன்றியது என்றார்.

பிகார் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிகாரின் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று பொருள்படும் வகையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

"சி.பி.ராதாகிருஷ்ணன் - கோவையின் தனிச் சிறப்பு'

"கோவை நகரானது கலாசாரம், கனிவு, படைப்புத் திறனை சொந்தமாகக் கொண்டதாகும். தொழில் துறையைப் பொருத்தவரை தென்னிந்தியாவின் சக்தி பீடமாக விளங்குகிறது. ஜவுளித் துறையைப் பொருத்தவரை நாட்டின் ஏற்றுமதிக்கு முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது.

இந்த ஊரில் எம்.பி.யாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது நாட்டின் குடியரசு துணைத் தலைவராகி இருக்கிறார். கோவையின் தனிச் சிறப்பு அது' என்றார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் வேட்டி, சேலை, பூணூல் அளிப்பு

கருங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

ஆலங்குடியில் அரசு ஊழியா்கள் வீடுகளில் 12 பவுன் நகைகள் திருட்டு

மனநலன் பாதித்து குணமடைந்தவா் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT