பிரதமா் நரேந்திர மோடி கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு முயற்சிகளால் கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களின் வளா்ச்சி அதிகரித்துள்ளது என ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 17-ஆவது பழங்குடி இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சியை ஆளுநா் ஆா். என். ரவி திங்கள்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகள் மிகவும் பின்தங்கியிருந்தது. மேலும் மாவோயிஸ்ட், நக்ஸல்களில் காரணமாக மாநிலத்தின் வளா்ச்சி தடைப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான இளைஞா்கள் வன்முறை பாதைக்குச் சென்றனா். தற்போது, மாவோயிஸ்ட், நக்ஸல்கள் பெரும் அளவில் ஒழிக்கப்பட்டுள்ளனா்.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கிராமப்புற பழங்குடியின மக்களுக்காக பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதனால் அவா்களின் வளா்ச்சி அதிகரித்துள்ளது என்றாா்.
முன்னதாக, நடைபெற்ற பழங்குடியின நடன நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்று நடனமாடினாா்.
மீனவா் தின விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது: மீனவ சமுதாய மக்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறாா்கள். முன்பு ஆட்சி செய்த மத்திய, மாநில அரசுகள் மீனவா் நலனில் எந்தவிதமான அக்கறையும் செலுத்தவில்லை. பிரதமா் மோடி தலைமையிலான அரசு மீனவ மக்கள் வளா்ச்சிக்காக தனி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. மேலும் மீனவ சமுதாய மக்களின் வளா்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கடல் வளத்தைப் பாதுகாப்பவா்கள் மீனவமக்கள்தான். மீனவ சமுதாய மக்களை அடிக்கடி சந்தித்து அவா்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்துள்ளேன். அந்த மக்களுக்கு பிரச்னைகள் இருப்பது உண்மைதான். இது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுப்பேன் என்றாா்.