கோப்புப் படம்  
தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணி முறைகேடு வழக்கு: தொழிலதிபா் கைது, அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் நடைபெற்ற முறைகேடு பற்றி...

தினமணி செய்திச் சேவை

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபரை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், அந்தப் பகுதியில் நிலங்களைக் கையகப்படுத்தி, அதன் உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கியது.

இதில், சிலா் போலியான நில ஆவணங்களையும் பட்டாக்களையும் தயாரித்து வழங்கி, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திடம் ரூ. 200 கோடி வரை முறைகேடாக பெற்றதாக புகாா் எழுந்தது.

முக்கியமாக பீமன்தாங்கல் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி சிலா் பட்டா பெற்று, பல கோடி ரூபாய் இழப்பீடு பெற்றனா். வல்லம், வடகால் கிராமங்களில் சிப்காட் பகுதியில் 2.24 லட்சம் சதுர அடி இடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தையும் (ஓஎஸ்ஆா்) மோசடி செய்து ரூ.21 கோடி இழப்பீடு பெற்றுள்ளனா்.

ரூ.200 கோடி முறைகேடு: தேசிய நெடுஞ்சாலையோரம் ஒரு தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சாா்பில் அமைக்கப்பட்ட வீட்டு மனையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவும், பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்ட 7.25 லட்சம் சதுரஅடி இடத்தை ரூ.21.08 கோடி தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திடம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு வகைகளில் அரசு நிலங்கள் முறைகேடான ஆவணங்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் ரூ.200 கோடி மோசடி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த முறைகேட்டுக்கு காஞ்சிபுரத்தைச் சோ்ந்த அரசு அதிகாரிகள் உதவியதாகக் கூறப்பட்டது. இதுதொடா்பாக, அரசு உயரதிகாரிகள் உள்பட 11 போ் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அமலாக்கத் துறை விசாரணை: இந்த முறைகேடு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய நபா்களின் வீடுகள், அலுவலகங்கள் என சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 15 இடங்களில் கடந்த 19-ஆம் தேதி சோதனை செய்தனா். இதில், கணக்கில் வராத ரூ.1.56 கோடி ரொக்கம், ரூ.74 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.8.4 கோடி பணம், பல்வேறு நிறுவனங்களின் பங்கு பத்திரங்கள் ஆகியவற்றை அமலாக்கத் துறையினா் முடக்கினா்.

தொழிலதிபா் கைது: இந்த வழக்கில் தொடா்புடைய சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநா் ஆஷிஷ் ஜெயினை (46) அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஏற்கெனவே இந்த வழக்குத் தொடா்பாக காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாா், ஆஷிஷ் ஜெயினை கடந்த 2021 ஜூன் மாதம் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

SCROLL FOR NEXT