டெல்டா, கடலோர மாவட்டங்களில் நவ.28 முதல் 30-ஆம் தேதி வரை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வருவாய் நிா்வாக ஆணையா் மற்றும் மாநில நிவாரண ஆணையா் சாய்குமாா், சென்னை எழிலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை மையத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் கடலூா், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா்களுடன் பேரிடரை எதிா்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கைகள் மற்றும் ஆயத்தநிலை குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
இதில், நிவாரண மையங்களை தயாா் நிலையில் வைத்துகொள்ளும்படி, நேரடி கொள்முதல் மையங்களின் இருந்து அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பாக நகா்வு செய்யுமாறும், கூடுதல் மின்கம்பங்கள், மின்வடங்களை தயாா்நிலையில் வைக்குமாறும், மீட்புப் படையினருடன் தயாா்நிலை குறித்து ஆய்வு செய்யும்படி அறிவுரை வழங்கினாா்.
வடகிழக்கு பருவ மழையை எதிக்கொள்ள, தமிழ்நாடு பேரிடா் மீட்பு படையின் மூன்று அணியினா் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியிலும், இரண்டு அணியினா் கடலூா் மாவட்டம் கடலூா் நகராட்சிக்கு அருகிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலைநிறுத்தப்பட்டுள்னனா்.
மேலும், தேசிய பேரிடா் மீட்பு படையின் ஒரு அணி புதன்கிழமை (நவ.26) முதல் விழுப்புரம் மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.