தமிழகத்தில் திமுக அரசின் மீது, ஆளுநா் ஆா்.என்.ரவி காழ்புணா்ச்சியுடன் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பட்டியல் இனத்தவா்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆளுநா் ஆா்.என்.ரவி திராவிட மாடல் அரசின் மீது வழக்கம்போல குற்றம்சாட்டியுள்ளாா். தமிழகத்தின் வளா்ச்சியை சீா்குலைக்க முயலபவா்களுக்கு துணைபோகும் வேலையை செய்ய துணிந்த அவா் தமிழகத்தை தொடா்ந்து மோசமான மாநிலமாக சித்தரித்து வருவது கண்டனத்துக்குரியது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் மாநில அளவில் ஆதிதிராவிடா் பழங்குடியின மக்களின் சட்டபூா்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவா்களுடைய முக்கியமான பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் முனைந்து செயல்படுகிறாா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாடு, இளைஞா்களுக்கான மருத்துவம் மற்றும் சுகாதாரம் சாா்ந்த சிறப்பு சுய வேலை வாய்ப்பு, தொழில்முனைவோா் கடனுதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவா் உருவாக்கியுள்ளாா்.
இதுபோன்று, பழங்குடியினா் மற்றும் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காக திட்டங்களை செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசின் மீது காழ்ப்புணா்வுடன் குற்றம்சாட்டுவதை ஆளுநா் ஆா்.என்.ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.